ஐசிசி உலக கோப்பை தொடர் துவங்கும் முன்னர். ஒவ்வொரு அணியினரும் தலா இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடினர். அவ்வாறு, இந்திய அணி தனது முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணியையும் இரண்டாவது போட்டியில் வங்கதேசம் அணியையும் சந்தித்தது. முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும் இரண்டாவது போட்டியில் அபாரமாக விளையாடி வெற்றி அடைந்தது, இந்திய அணி. எனவே, இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய இந்திய வீரர்களின் மூன்று சிறந்த செயல்பாடுகளைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#3.ரவீந்திர ஜடேஜா:
ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஆடும் லெவனில் தமது பெயரை இணைப்பதற்கு முயற்சியை மேற்கொண்டார். நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி 81 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில் தனது அபார ஆட்டத்தால் அரைசதம் அடித்து 179 என்ற ஸ்கோரை எட்ட உதவினார். விக்கெட்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து கொண்டிருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் உருவாக்கினார், ரவீந்திர ஜடேஜா. பந்துவீச்சிலும் ஓரளவுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார்.
#2.கே.எல்.ராகுல்:
இரு பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணியின் சர்ச்சைக்குரிய பேட்டிங் வரிசையான நான்காமிடத்தில் கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டார். முதலாவது போட்டியில் விரைவிலேயே ஆட்டமிழந்தாலும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், கே.எல்.ராகுல். கடந்த ஆட்டத்தை போலவே இரண்டாவது ஆட்டத்திலும் விரைவிலேயே இரு தொடக்க ஆட்டக்காரர்களும் தமது விக்கெட்களை இழந்து இருந்தனர். அவ்வேளையில் கேப்டன் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி சீராக ரன்களைக் குவித்தார், ராகுல். இவர் 45 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தாலும் விரைவிலேயே அதனை சதமாக மாற்றினார். இதனால், இந்திய அணியின் நான்காமிடம் இவருக்கு தற்போது உறுதியாகியுள்ளது.
#1.ஜஸ்பிரிட் பும்ரா:
சர்வதேச போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பும்ரா இரு பயிற்சி ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டார். முதலாவது ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஓவர்கள் உட்பட ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டத்தில் 5 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தியாவின் முக்கிய துருப்பு சீட்டாக பும்ரா விளங்குவார் எனவும் மூன்றாவது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்களிப்பார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.