மூன்றாவது உலகக் கோப்பையை வெல்லும் நோக்கில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. ஜீன் 5 அன்று நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தனது முதல் தகுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளது. இதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள ஒரு அணியாக இங்கிலாந்துடன் சேர்ந்து திகழ்கிறது. உலகின் தலைசிறந்த இரண்டாவது ஓடிஐ கிரிக்கெட் அணியாக இந்தியா தற்போது திகழ்கிறது. அத்துடன் 2015 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கு சிறப்பான இந்திய அணி தேர்வுக்குழுவால் தேர்வு செய்து இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் இந்திய அணியின் வீரர்களை உலகக் கோப்பை தொடர் ஆரமிக்கும் முன் சோதித்து பார்க்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது.
நாம் இங்கு இந்திய அணி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் மேற்கொள்ள உள்ள 3 சோதனைகளை பற்றி காண்போம்.
#1 மிடில் ஆர்டரில் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுலை விளையாட வைக்க வேண்டும்
இந்திய அணியின் நம்பர்-4 இடத்தில் விஜய் சங்கரும், கே.எல்.ராகுல் மாற்று தொடக்க ஆட்டக்காரராகவும் உலகக் கோப்பை தொடரில் இருப்பார்கள் என இந்திய தேர்வுக்குழு தலைவர் பிரசாந்த் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரை வைத்து பார்க்கும் போது விஜய் சங்கர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். கே.எல்.ராகுல் ஒரு சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே கே.எல்.ராகுலை இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாக களமிறக்க அதிக வாய்ப்புள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் கே.ராகுல் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக மிகவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். எனவே விஜய் சங்கரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக பயிற்சி ஆட்டத்தில் சோதனை செய்து பார்க்க வேண்டும். இவர் நம்பர்4 முதல் நம்பர்-7 வரையிலான அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராகுலை விட சங்கருக்கு மிடில் ஆர்டரில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பயிற்சி ஆட்டத்தில் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரையுமே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவே வாய்ப்பளித்து பார்க்க வேண்டும். ராகுலை நம்பர்-4 பேட்டிங் வரிசையிலும், விஜய் சங்கரை நம்பர்-5 பேட்டிங் வரிசையிலும் களமிறக்கப்பட வேண்டும். இதன்மூலம் இவர்களின் மிடில் ஆர்டர் பேட்டிங் திறனை சோதித்து பார்த்துவிட முடியும். அத்துடன் கே.எல்.ராகுல் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்வதால் அவர் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வார் என நம்பப்படுகிறது.