#2 இந்திய அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்துவிட வேண்டும்
கடந்த இரு வருடங்களாக ஜாஸ்பிரிட் பூம்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவரும் தொடக்க பவர்பிளே ஓவரிலும், டெத் ஓவர்களிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வந்தனர். இவர்கள் இருவரும் உலகக் கோப்பை தொடரிலும் முன்னணி வீரர்களாக திகழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரில் எவரேனுக்கும் காயம் ஏற்பட்டு விட்டால் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிடும்.
இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிக பௌலர்களை மூன்றாவது வேகப்பந்து வீச்சிற்கு முயற்சி செய்து பார்த்து, இறுதியாக அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை 2019 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்துள்ளது.
2015 உலகக் கோப்பை தொடரிலிருந்து அக்டோபர் 2018 வரையிலான காலகட்டத்தில் முகமது ஷமி 4 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று உள்ளார். இருப்பினும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை முகமது ஷமி வென்றதன் மூலமாகவே இந்திய அணி இவர் மீது அதிக நம்பிக்கையை வைத்தது. அத்துடன் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் டெத் ஓவரில் மிகவும் அருமையாக பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். அக்டோபர் 2018 முதல் இந்திய அணிக்காக புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகிய இருவருமே கிட்டத்தட்ட சமமாகவே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். புவனேஸ்வர் குமார் எட்டாவது பேட்டிங் வரிசையில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ஷமி எத்தகைய மைதானங்களிலும், எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உடையவர்.
இருவருமே சிறப்பான சர்வதேச பௌலர்கள் ஆவார்கள். ஆனால் உலகக் கோப்பை தொடரில் இருவரில் ஏதேனும் ஒருவர் மட்டுமே வழக்கமான வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம்பெற முடியும். பயிற்சி ஆட்டத்தின் வாயிலாக உலகக் கோப்பை தொடரில் பூம்ராவுடன் சேர்ந்து பந்துவீசப் போகும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்பதை தீர்மானிக்க விராட் கோலிக்கு ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும்.