2019 உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஓரிரு வாரங்களில் உள்ளது. அதற்கு முன்னர், தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக், உலக கோப்பை தொடரின் ஆர்வத்தை மேலும் கூடி வருகிறது. இந்த 12வது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் 30ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் இந்த தொடர் நடைபெறவுள்ளது. தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும் 12 மைதானங்களில் விளையாட இருக்கின்றன. இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது உலக கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது. மேலும், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் உலகக் கோப்பையை வெல்வதற்கான தகுதி உடைய அணிகளாக கருதப்படுகின்றன.
எனவே, கடந்த 2015 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி நடப்பு உலக கோப்பை தொடரை தவறவிட்ட மூன்று சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.பிரண்டன் மெக்கலம் - நியூசிலாந்து :
2015 உலக கோப்பை தொடரில் பந்து வீச்சாளர்களை தனது சரவெடி தாக்குதலால் கண்கலங்க செய்தவர், பிரண்டன் மெக்கலம். இவரது தலைமையில் நியூசிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. பேட்டிங்கில் மட்டுமல்லாது ஒரு கேப்டனாகவும் தன்னால் முடிந்த பங்களிப்பை நியூசிலாந்து அணிக்கு அளித்தார், மெக்கல்லம். அந்த தொடரோடு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நாக்-அவுட் போட்டிகளை ஒருமுறைகூட தாண்டாத அணி என்ற மோசமான சாதனையை வைத்திருந்தது, நியூசிலாந்து அணி. எனவே, இத்தகைய மோசமான சாதனையை போக்கும் வகையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அரைசதம் அடித்து தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணியை தகுதி பெற செய்தார், பிரண்டன் மெக்கல்லம்.
#2.குமார் சங்கக்காரா- இலங்கை:
2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் தோற்ற போதிலும் சங்ககாராவின் புன்னகை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே நன்மதிப்பை பெற செய்தது. முன்னாள் இலங்கை அணியின் கேப்டனான இவர், 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு கொண்டுவருவதாக கூறியிருந்தார். துரதிஷ்டவசமாக, இலங்கை அணி 2015 உலக கோப்பை தொடரின் காலிறுதியுடன் வெளியேறியது. எனவே, இவரும் இந்த தொடரோடு தனது ஓய்வையும் அறிவித்தார். இவர் இதுவரை 37 உலக கோப்பை போட்டிகளில் பங்குபெற்று 1532 ரன்களை குவித்தார். மேலும், உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தை வகிக்கிறார்.
#1.டிவில்லியர்ஸ் - தென்னாப்பிரிக்கா:
2019 உலகக் கோப்பை தொடரை தவறவிட்ட வீரர்களில் முக்கியமான வீரர், தென்னாப்பிரிக்காவின் ஏ.பி.டிவில்லியர்ஸ். "மிஸ்டர் 360" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், கடந்த ஆண்டு அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்திருந்தார். இது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மூன்று உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள இவர், அவற்றில் 23 போட்டிகளில் பங்கேற்று 1707 ரன்களை குவித்துள்ளார். தென்னாபிரிக்கா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைப்பார் என்றிருந்த நிலையில், திடீரென தனது ஓய்வினை அறிவித்து கிரிக்கெட் உலகிற்கு பேரதிர்ச்சி அளித்தார்