2019 உலகக் கோப்பை கிரிக்கெட், இங்கிலாந்தில் நடக்கவுள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்கள் அணி விவரத்தை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், மே 30 முதல் போட்டிகள் தொடங்க உள்ளன.
ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. 2019 உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று, ஆப்கானிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இந்த உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் தவ்லத் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான்:
2010, டி20 உலக கோப்பைக்குப் பின் ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை அடைந்தது. ஆப்கானிஸ்தான் அணி, 2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி, உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி, முகமது ஷேசாத் ஆகியோர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.
2018ல் நடந்த ஆசிய கோப்பையிலும் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி, சிறந்த அணியாக உருவெடுத்து இந்த உலகக் கோப்பையில் களம் காண உள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தான் அணி, இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் தவ்லத் கான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தேர்வு குறித்து அவர் கூறியதாவது...
"2015 உலகக் கோப்பையில், ஆஃப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பெற்றது. அந்த உலகக் கோப்பையில் ரஷித் கான், முஜீப் ஆகியோர் இல்லை. ஆனால், இந்த உலகக் கோப்பையில் எங்களது நோக்கம் அரையிறுதிக்கு முன்னேறுவதே ஆகும். தற்பொழுது உள்ள ஆப்கானிஸ்தான் அணியை பார்க்கும்பொழுது கண்டிப்பாக இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன். வேகப்பந்து வீச்சாளர் ஹமித் ஹாசன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது எங்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. ஹமித் ஹாசன், சிறந்த வேகப்பந்து வீச்சாளர், அவர் வேகப்பந்து வீச்சில், தவ்லத் உடன் முன்னின்று வழி நடத்துவார்" .
மேலும், உலகக் கோப்பைக்காக ஆப்கானிஸ்தான் அணி தயாராகும் முறை மகிழ்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் தவ்லத் கான் கூறினார். கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி வரும் ஆஃப்கானிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் கவனிக்கப்படும் அணியாக உள்ளது.
அடுத்து என்ன?
2019 உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு முன் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ளது.