12வது உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் வீரர்களின் செயல்பாடு சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. ஏனெனில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களின் பங்களிப்பு அபாரமாக உள்ளது. மேலும், புவனேஸ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்து வருகின்றனர்.
இந்திய அணியின் நான்காமிடத்தில் யார் விளையாடப் போகிறார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், பெரிதும் பேசப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு பதிலாக உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் இணைக்கப்பட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் நான்காம் இடத்தில் களமிறங்குவார் எனவும் கே.எல்.ராகுல் மாற்று தொடக்க வீரராகவும் தினேஷ் கார்த்திக் மாற்று விக்கெட் கீப்பராகவும் அணியில் இடம் பெற்று இருக்கின்றனர். எனவே, 2011 தொடரை பின்னர் மீண்டும் ஒரு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது. அவ்வாறு, 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பங்காற்றவுள்ள ஐந்து சிறந்த வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5.ஷிகர் தவான்:
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல் இந்திய அணியில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். இவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கடந்த 2015 உலகக் கோப்பை தொடரிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே உள்ளார், தவான். உலகக் கோப்பை தொடர், ஆசிய கோப்பை தொடர், சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மிகப்பெரிய தொடர்களில் தனது அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளார், ஷிகர் தவான். மேலும், தற்போது நடைபெற்று வரும் ஐபில் தொடரிலும் டெல்லி அணிக்காக இடம்பெற்று ஐபிஎல்லில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் நான்காம் இடம் வகித்து நம்பிக்கை அளிக்கிறார். எனவே, உலக கோப்பை தொடரில் இவரின் செயல்பாடுகள் இந்திய அணிக்கு வெற்றிகளை குவிக்க உதவும் என எதிர்பார்க்கலாம்.
#4.மகேந்திர சிங் தோனி:
தனது நான்காவது உலக கோப்பை தொடரில் பங்கேற்கப் போகும் மகேந்திர சிங் தோனி இம்முறை அணியில் ஒரு வீரராக களம் இறங்கி இருக்கிறார். பல அனுபவங்களை கொண்ட தோனி இளம் வீரர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வெற்றி காண்பதில் வல்லவர். தற்போது, உலகின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக உள்ளார், மகேந்திர சிங் தோனி. இதுமட்டுமல்லாது, நெருக்கடி நிலைகளை கையாண்டு அணியின் வெற்றிக்கு பலமுறை பாடுபட்டுள்ளார். விராட் கோலிக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி அணிக்கு வெற்றிகளை உருவாக்கி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரிலும் தனது உச்சகட்ட ஃபார்மை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளார், மகேந்திரசிங் தோனி.
#3.ஹர்திக் பாண்டியா:
ஆட்டத்தை எந்நேரத்திலும் மாற்றக்கூடிய வீரராக சமீப நாட்களில் உருவெடுத்து வருகிறார், ஹர்திக் பாண்டியா. சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி மூன்றாண்டுகள் கடந்த நிலையில், 50 மற்றும் 20 ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார், பாண்டியா. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சிறப்பாக பங்காற்றிய யுவராஜ் சிங்கை போல இவரும் தனது ஆல்ரவுண்டு ஆட்டத்திறனை வெளிப்படுத்த உள்ளார். மேலும், நடப்பு ஐபிஎல் தொடரில் அபாயகரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
#2. ஜஸ்பிரிட் பும்ரா:
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் நம்பர்-1 பந்து வீச்சாளராக உள்ளார், ஜஸ்பிரிட் பும்ரா. இவர் இந்திய அணிக்கு அனைத்து தரப்பு போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடிய வண்ணம் வருகிறார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் உடன் இணைந்து தனது அபார பந்து வீச்சு தாக்குதல் எதிரணியின் விக்கெட்களை வீழ்த்துவதில் வல்லமை கொண்டவர். குறைந்த வேகப் பந்து மற்றும் யார்க்கர் பந்துகளால் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனை கூட தமது பந்துவீச்சால் வீழ்த்தி வருகிறார். இந்திய பந்துவீச்சில் முக்கிய தூணாக உள்ள இவர், மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்லிலும் இவரது ஆட்டம் அபாரமாக உள்ளது.
#1.விராட் கோலி:
எந்த ஒரு சூழ்நிலையையும் கையாண்டு வெற்றி காண்பதில் சிறந்தவரான விராத் கோலி, அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வருகிறார். முதல் முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்த உள்ளார், விராத் கோலி. உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் சிறந்த ஃபில்டர் ஆகவும் திகழும் விராத் கோலி, மீண்டும் ஒரு முறை இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும் மகேந்திர சிங் தோனிக்கு விருந்தளிக்கும் விதமாகவும் இம்முறை உலகக் கோப்பை தொடரை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.