இம்மாத இறுதியில் துவங்க உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்க போகும் வர்ணனையாளர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்தப் பட்டியலில் வர்ணனையில் சிறந்து விளங்கும் இந்தியரான ஹர்ஷா போக்லே உடன் சவுரவ் கங்குலி மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் போன்ற முன்னாள் இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். 2019 உலக கோப்பை தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளனர். இந்த மெகா திருவிழாவிற்கு ஒவ்வொரு அணியினரும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த திருவிழாவில் வர்ணனையாளர் பிரிவில் மேலும் வலுசேர்க்கும் வர்ணனையாளர்கள் பட்டியலை காண ரசிகர்களும் கூட கடும் ஆர்வமாக இருந்து வந்தனர். இவர்களின் கேள்விகளுக்கு தற்போது விடை அளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேற்று இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த தொகுப்பில் 2015 உலக கோப்பை தொடரை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், முதல் முறையாக உலக கோப்பை தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். அதேபோல, கடந்த 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 4 சதங்களை குவித்த இலங்கையின் குமார் சங்ககாரா இந்த தொகுப்பில் இணைந்துள்ள மேலும் ஒரு இளம் வர்ணனையாளர் ஆவார். இந்த தொகுப்பில் முன்னால் ஜாம்பவான்களான இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, தென்ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித், பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இது போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் சில வர்ணனையாளர்கள் ஆன ஹர்ஷா போக்லே மற்றும் மைக்கேல் ஹோல்டிங் ஆகியோரையும் இடம் பெறச் செய்துள்ளது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
இந்த தொகுப்பில் ஏறக்குறைய உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வர்ணனையாளர்கள் பட்டியல் வருமாறு,
நசீர் ஹுசைன், இயான் பிஷப், சௌரவ் கங்குலி, ஜோன்ஸ், குமார் சங்ககரா, மைக்கேல் ஆதார்டன், அலிசன், பிரண்டன் மெக்கலம், கிரீம் ஸ்மித், வாசிம் அக்ரம், ஷான் பொல்லாக், மைக்கேல் ஸ்லேட்டர், மார்க் நிகோலஸ், மைக்கேல் ஹோல்டிங், ஈஷா குஹா, பொம்மி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஹர்ஷா போக்லே, சைமன், இயான் ஸ்மித், ரமீஷ் ராசா, அத்தர் அலி கான் மற்றும் இயான்வார்டு.
இங்கிலாந்தில் நடைபெறும் 12வது உலக கோப்பை தொடரின் முதலாவது போட்டி கென்னிங்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இந்த போட்டியில் பல பயிற்சியில் ஈடுபட உள்ளனர். தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஒருவரை ஒருவர் எதிராக லீக் சுற்றில் விளையாட வேண்டும்.