நடந்தது என்ன?
முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மற்றும் ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் மார்க் வாக் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி-யை தேர்வு செய்துள்ளார். அத்துடன் உலகின் டாப்-3 பேட்ஸ்மேனாக இந்திய கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மற்றும் இங்கிலாந்தின் பொறுப்பு கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா...
மார்க் வாக் ஆஸ்திரேலிய அணிக்காக 14 வருடங்களாக விளையாடியுள்ளார். 1999ல் உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியில் மார்க் வாக் இடம்பெற்றிருந்தார். உலக கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான ஸ்டைலிஷ் கிரிக்கெட்டராக மார்க் வாக் வலம்வந்தார். இவர் ஒரு சிறப்பான ஸ்லிப் ஃபீல்ட்ர் ஆவார்.
கதைக்கரு
ஆஸ்திரேலிய அதிகாரபூர்வ கிரிக்கெட் வலைதளத்தில் ஸ்டைலிஸ் வலதுகை பேட்ஸ்மேன் மார்க் வாக்-யிடம் உலகின் டாப் 3 பேட்ஸ்மேனாக யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மார்க் வாக் கூறியதாவது,
விராட் கோலி நம்பர்-1 பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இரண்டாவதாக ஜாஸ் பட்லரை தேர்வு செய்கிறேன். மூன்றாவது பேட்ஸ்மேனாக, ஆரோன் ஃபின்ச் இந்த இடத்திற்கு தகுந்த வீரராக இருந்தாலும், டேவிட் வார்னரை நான் மூன்றாவது சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்கிறேன்.
தனது சக நாட்டு வீரரான டேவிட் வார்னர் இருக்கும்போது விராட் கோலியை தனது நம்பர்-1 பேட்ஸ்மேனாக மார்க் வாக் தேர்வு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓடிஐ கிரிக்கெட்டில் விராட் கோலி-யின் சராசரி 60ஆக உள்ளது. இதனால் விராட் கோலி கடந்த 3 வருடமாக உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
ஜாஸ் பட்லர் சமீபத்தில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அத்துடன் கடந்த இரு ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை பேட்டிங்கில் அளித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பையை வெல்ல கண்டிப்பாக இவர் முன்னனி வீரராக செயல்படுவார். இங்கிலாந்து விக்கெட் கீப்பரான ஜாஸ் பட்லர் ஒருநாள் கிரிக்கெட்டில் 120 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3500 ரன்களை குவித்துள்ளார்.
டேவிட் வார்னர் ஓடிஐ கிரிக்கெட்டில் 4343 ரன்களை குவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை டேவிட் வார்னர் வெளிபடுத்தினார். மொத்தமாக 12 போட்டிகளில் 692 ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை(தொடரின் அதிக ரன்களை குவித்தோருக்கான அடையாளம்) கைப்பற்றினார் டேவிட் வார்னர். இந்த சிறப்பான ஆட்டம் உலகக் கோப்பை தொடரிலும் தொடரும் என ஆஸ்திரேலிய நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
அடுத்தது என்ன?
இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் 2019 உலகக் கோப்பையில் அரையிறுதியில் பங்கேற்க அதிக வாய்ப்புள்ள அணியாக திகழ்கிறது. இவ்வருட உலகக் கோப்பையை கைப்பற்ற இந்த மூன்று வீரர்கள் அவரவர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.