உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த முறை இங்கிலாந்து மண்ணில் நடக்க உள்ளது. மே- 30 இல் தொடங்கி ஜூலை- 14 தேதி வரை நடக்க உள்ளது, உலகக் கோப்பை கிரிக்கெட். இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த முறை அணிகள், குரூப்- ஏ, குரூப்- பி என தனித்தனியாக பிரிக்கப்படவில்லை. ஒவ்வொரு அணியும், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அனைத்து அணிகளுடனும் ஒரு முறை மோத வேண்டும். தரவரிசை பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறும். முதல் போட்டி ஓவல் மைதானத்திலும், இறுதிப் போட்டி வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்திலும் நடக்க உள்ளது. ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகின. உலகக்கோப்பை 2019- இல், பங்கேற்கும் அணிகள் 15 பேர் கொண்ட தங்களது அணியை, ஏப்ரல் 23 தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஐசிசி கூறியிருந்தது.
அனைத்து அணிகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணியை தேர்வு செய்துள்ள நிலையில், ஒவ்வொரு அணியிலும் தேர்வு செய்யப்படாத தலா ஒரு முக்கிய வீரரை குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#1.இந்தியா - ரிஷப் பண்ட் :
இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளிலும், பதினைந்து டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார், ரிஷப் பண்ட். இவர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் தலா ஒரு சதம் அடித்துள்ளார். விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் பண்ட், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனுபவமிக்க தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
#2. ஆஸ்திரேலியா - பீட்டர் ஹெண்ட்ஸ்காம்ப்:
உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்பை தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியை அளிக்கிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்த்தார். அலெக்ஸ் கேரிக்கு, காயம் ஏற்பட்டால் ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் இல்லை. இதனை கருத்தில் கொண்டாவது பீட்டர் ஹேண்ட்ஸ்காம்பை ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்திருக்கலாம். ஓராண்டு தடைக்குப் பின் , ஸ்டீவன் ஸ்மித் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதால்,பீட்டர் ஹேண்ட்ஸ்காம்பிற்கு அந்த வாய்ப்பு பறிபோனது.
#3. இங்கிலாந்து - ஜோப்ரா ஆர்ச்சர்:
முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆர்ச்சர், உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் இதுவரை அவர் 131 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.பேட்டிங்கில், ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஐபிஎல்- இல் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவே அவரது முதல் சர்வதேசப் போட்டியும் ஆகும்.
#4.இலங்கை - தினேஷ் சண்டிமால்:
இதுவரை இலங்கை அணிக்காக, 146 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3599 ரன்கள் எடுத்துள்ளார் தினேஷ் சண்டிமால். 2010 இல் தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய சண்டிமால், மிடில் ஆர்டரில் இலங்கை அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். ஆனால், 2016இல் இருந்து 24 போட்டிகளில் விளையாடி 524 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், இலங்கை அணியில் இருந்து விலக்கப்பட்டார். 2018-இல் உள்ளூரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், அவர் உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெறவில்லை.
#5. நியூசிலாந்து -டிம் சீபெர்ட்:
உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில், டிம் சீபெர்ட் தேர்வு செய்யப்படவில்லை. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், நியூசிலாந்து அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வந்த டிம், உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக டாம் பிளண்டல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#6. வெஸ்ட் இண்டீஸ் - கீரோன் பொல்லார்ட்
:வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக் கோப்பைக்கான தங்களது அணியை அறிவித்துள்ள நிலையில், கீரோன் பொல்லார்ட் அதில் இடம் பெறவில்லை. ஆல்ரவுண்டரான பொல்லார்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் இவர், 175 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அனுபவமுள்ள வீரராக இருந்தாலும் அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. இதனால், உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெறவில்லை.
#7. தென் ஆப்பிரிக்கா - கிறிஸ் மோரிஸ்:
ஆல்-ரவுண்டரான கிறிஸ் மோரிஸ், தென் ஆப்ரிக்கா அணிக்காக 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவர், ஐபிஎல்-இல் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தும் அவர் உலகக் கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் பெலுக்வாயோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
#8. வங்கதேசம்- இம்ருல் கெய்ஸ்:
வங்கதேச அணிக்காக 76 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார், இம்ருல் கெய்ஸ். அதில் அவர் 2430 ரன்களை எடுத்துள்ளார். பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர், உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், லிட்டன் தாஸ் உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
#9.ஆப்கானிஸ்தான் - சபூர் ஜார்தன்:
ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான சபூர் ஜார்தன், இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2009இல் நெதர்லாந்து அணிக்கு எதிராக , தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். இதில் அவர் 10 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சாக இதுவரை உள்ளது. மேலும் அவர், 2015ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். எனினும், அவர் உலக கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இம்முறை இடம்பெறவில்லை.
#10. பாகிஸ்தான் - முகமது அமீர்:
பாகிஸ்தானை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் அமீர் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளரை பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. 2017 இல் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் அவரின் அபார பந்துவீச்சு பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது. எனினும், அதற்குப் பின் நடந்த போட்டிகளில் 101 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். கடந்த போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாத காரணத்தினால் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் முகமது அமீர் இடம்பெறவில்லை.