இந்தியா – இங்கிலாந்து போட்டி நடைபெறுவதற்கு முன்பு, எட்ஜ்பாஸ்டன் மைதனத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு சொல்லிக் கொள்வதற்கு நிறைய நட்சத்திரங்கள் – கோலி, ரோகித் சர்மா, “தல” தோனி, பும்ரா – இருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ரசிகர்களும் ஊடகமும் ஒரே ஒரு பெயரை மட்டுமே உச்சரித்தனர்; அது ஜேசன் ராய்.
“ஜோ ரூட், மார்கன், பட்லர், ஸ்டோக்ஸ் என இங்கிலாந்து அணியில் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஆனால் ராய் தான் எங்களுக்கு முக்கியம்” என பல இங்கிலாந்து ரசிகர்கள் கூறுவதை கேட்க முடிந்தது. அன்றைய தினம் அனைத்து பத்திரிக்கைகளிலும் ராய் பற்றிய செய்திகளே நிரம்பியிருந்தன. இந்த உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னர் இங்கிலாந்து அணியே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என பல கிரிக்கெட் வல்லுனர்களும் கூறினர். ஏனென்றால், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ், பட்லர், ஆர்ச்சர் என நட்சத்திர பட்டாளமே அந்த அணியில் இருந்தது. ஆனால் ஜேசன் ராயிடம் என்ன சிறப்பு இருக்கிறது? ஏன் அவரைப் பற்றி இங்கிலாந்தில் அனைவரும் பேசுகின்றனர்?
இதற்கு பதில் ரொம்ப எளிமையானது. இவரால் சஹாலின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முடிவதோடு குல்தீப் யாதவின் கூக்ளியை கணித்து அவரது தலைக்கு மேலேயே பவுண்டரி அடிக்க முடியும்; லெக் ஸ்பின்னில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வரும் பந்தை மிட் விக்கெட் திசையில் அநாயசமாக சிக்ஸர் அடிக்க முடியும்; பும்ரா போன்ற சிறந்த பவுலர்களுக்கு மதிப்பளித்து மற்ற வேகப் பந்துவீச்சாளர்களின் பந்தை லாங்-ஆன் திசைக்கு துரத்த முடியும். சுருக்கமாக கூறினால், முக்கியமான போட்டியில் தன் அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இந்திய போட்டிக்கு முன்பாக ராய் கடைசியாக விளையாடிய எட்டு போட்டிகளில் இரண்டு சதங்கள் உள்பட நான்கு அரைசதங்களை அடித்துள்ளார். குறிப்பாக இந்த உலக கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் பந்தை விரட்டியடித்து 153 குவித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக காயம் காரணமாக அந்தப் போட்டிக்கு பிறகு அணியிலிருந்து விலகினார் ராய்.
சில விஷயங்கள் சிலருக்கு நம்பிக்கையையும் வலிமையையும் கொடுக்கும் என்பதை பல கதைகள் மூலம் நாம் கேட்டிருப்போம். அதேப்போல் தான், இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் நம்பிக்கையின் அடையாளமாக விளங்குகிறார்.
நேற்றைய போட்டியில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்த பேர்ஸ்டோ, ராயோடு பேட்டிங் செய்யும் போது மட்டும் அவரது பேட்டிங் அனுகுமுறையே வேறு விதமாக உள்ளது. அதே சமயம் ராய் இல்லாத போட்டிகளில் பேர்ஸ்டோ திணறுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் ரன் அடிக்கவே மிகவும் தடுமாறினார். அந்தப் போட்டிகளில் இங்கிலாந்து அணியும் தோல்வி அடைந்தது.
ஆனால் நேற்று அவருக்கு பக்கபலமாக ராய் இருந்தார். இதனால் முதல் பவர்ப்ளேயில் பும்ரா ஓவரை மெய்டன் செய்த போது அவர் கவலையே படவில்லை. ஏனென்றால், மறுபுறத்தில் நிற்கும் ராய் இதை சரிகட்டிவிடுவார் என பேர்ஸ்டோவிற்கு தெரியும். அதை தான் ராயும் செய்தார். ராய் அணியில் இருப்பது இங்கிலாந்து அணியில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது பார்த்தீர்களா?
இதனால் தான், முழு உடல் தகுதி பெறவில்லை என்றாலும் முக்கியமான நேற்றைய போட்டியில் ராயை விளையாட வைத்தார் கேப்டன் மார்கன். இதை போட்டிக்கு முன்பு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தெரிவித்தார் மார்கன். ஏனென்றால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால், ராய் விளையாடியே ஆக வேண்டும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தது இங்கிலாந்து அணி நிர்வாகம்.
“இந்த முடிவை எடுப்பதற்கு முன், இதனால் ராய் நீண்ட காலம் விளையாட முடியாமல் போகுமா என்பதை பார்த்தோம்; அப்படியெல்லாம் ஆக வாய்ப்பில்லை, ஆனால் சில வாரங்கள் மட்டும் விளையாட முடியாமல் போகும் என தெரிந்ததும் துணிந்து ராயை விளையாட வைத்தோம்” என பேட்டியின் போது கூறினார் மார்கன்.
இந்த துணிச்சலான முடிவு இங்கிலாந்து அணிக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி பேர்ஸ்டோ மற்றும் ராய், மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் இந்திய பந்துவீச்சை விரட்டி அடித்தனர். குல்தீப் மற்றும் சஹாலை குறிவைத்து இருவரும் தாக்கினர். இவர்களின் ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் தவறாமல் சென்றது. குறிப்பாக ராய் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க தயங்கவில்லை.
21 ரன்னில் இருக்கும் போது அவுட் ஆகும் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தார் ராய். அவரது க்ளொவுசில் பட்ட பந்து தோனியிடம் கேட்ச் ஆனது. ஆனால் நடுவர் அவுட் கொடுக்காததோடு இந்திய அணியினரும் DRS கேட்கவில்லை. இவரும் பேர்ஸ்டோவும் இணைந்து 10 முதல் 20 ஓவர்களில் 98 ரன்களை அடித்தனர். இங்கிலாந்து அணியின் பெரிய ஸ்கோருக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது. இவர்களை 23-வது ஓவரிலேயே இந்திய பவுலர்களால் பிரிக்க முடிந்தது. 66 ரன்னில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஜடேஜா பிடித்த அற்புதமான கேட்ச்சால் அவுட்டானார் ராய்.
சதம் அடிக்காமல் வெளியேறினாலும் அணி நிர்வாகம் தன் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்து அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து விட்டுச் சென்றார் ராய். முடிவில் 338 ரன் என்ற இமாலய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்து 31 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது இங்கிலாந்து.