12வது உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் 30ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் நாயகர்களான கிறிஸ் கெய்ல், இம்ரான் தாஹிர் ஆகியோர் ஓய்வுபெற இருக்கின்றனர். மேலும், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை பின்னர், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இந்த தொடரில் தான் சர்வதேச போட்டிகளுக்கு திரும்புகின்றனர். இதுமட்டுமல்லாது, விராத் கோலி, கனே வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் போன்ற இளம் ஜாம்பவான்கள் தங்களது அணிக்காக கடும் போராட்டத்தை அளிக்க உள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த உலக கோப்பை தொடரில் பல சர்வதேச வீரர்கள் அறிமுகமாக இருக்கின்றனர். இதில் குறிப்பிடும் வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை முடித்து வரும் வீரராக திகழும் ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பை தொடரிலும் அதே ஃபார்மை தொடர உள்ளார். 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமின் பேட்டிங்கை இந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. எனவே, இந்த உலக கோப்பை தொடரில் அறிமுகமாக உள்ள ஐந்து சர்வதேச வீரர்களை பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கின்றது.
#1.ஜானி பேர்ஸ்டோ:
இங்கிலாந்து அணிக்காக 2011 ஆம் ஆண்டில் அறிமுகமாகி இருந்தாலும் 2015 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தான் அணியின் முக்கிய உறுப்பினர் ஆகினார், ஜானி பேர்ஸ்டோ. மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் களமிறங்கும் இவர், 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் தொடரிலிருந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். இங்கிலாந்து அணிக்காக 33 போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி ஆறு சதங்கள் உட்பட 1471 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 50.72 என்ற வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் சிறப்பாக திகழும் இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோர் உள்ளதால் இவருக்கான பணிச்சுமை பெரிதும் குறைக்கப்படும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்ற இவர் 10 போட்டிகளில் விளையாடி 445 ரன்களை குவித்துள்ளார். ஏற்கனவே, இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையில் முக்கிய பொறுப்பு இவருக்கு உண்டு. தனது முதலாவது 50 ஓவர்கள் கொண்ட உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இவர் தனது சரவெடி தாக்குதலை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.உஸ்மான் கவாஜா:
நெடுநாட்களாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பெற்றிருந்தாலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தார், உஸ்மான் கவாஜா. இந்தியாவுக்கு எதிரான 8 போட்டிகள் மற்றும் பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஆறு அரைசதங்கள், இரண்டு சதங்கள் உட்பட மொத்தம் 769 ரன்களை குவித்துள்ளார். மேலும், இவரது ஆட்டத்திறன் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர்களை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் அவர்களுடன் இணைந்து தனது முதலாவது உலக கோப்பை தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3.ககிசோ ரபாடா:
சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள ஒரே பந்துவீச்சாளரான ரபாடா கடந்த 2015 ஆம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். மணிக்கு 140லிருந்து 150 கிலோ மீட்டர் வேகம் வரை பந்து வீசும் இவரது அபார பந்துவீச்சு எதிரணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கும். ஏற்கனவே தென்னாபிரிக்க அணியில் உள்ள லுங்கி இங்கிடி, ஸ்டெயின் ஆகியோருடன் இணைந்து தனது தாக்குதலை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர். 106 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கூட 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளர்களில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். எனவே, தென் ஆப்பிரிக்க அணி தனது முதலாவது உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு இவர் பெரும் பங்காற்ற உள்ளார்.
#4.ரஷீத் கான்:
20 வயதேயான ரஷித் கான் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக உருவெடுத்து வருகிறார். இவர் விளையாடியுள்ள 57 ஒருநாள் போட்டிகளில் 123 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். சமீப வருடங்களாக ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய துருப்பு சீட்டு விளங்கி வருகிறார். இவர் ஏற்கனவே அணியில் உள்ள முஜிப் ரகுமான், முகமது நபி, ஹமீத் ஹாசன் ஆகியோருடன் இணைந்து தனது சுழற்பந்து வீச்சு தாக்குதலை உலககோப்பை தொடரில் தொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரிலும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், ரஷித் கான்.
#5.ஜஸ்பிரிட் பும்ரா:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் முக்கிய பங்காற்ற உள்ளார், ஜஸ்பிரிட் பும்ரா. இவர் இந்தியாவின் தலை சிறந்த பந்துவீச்சாளர் ஆகவும் ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் ஆகவும் திகழ்ந்து வருகிறார். இவர் இதுவரை விளையாடியுள்ள 49 ஒருநாள் போட்டிகளில் 85 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். முகமது சமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் என அணியில் ஒரு பவுலிங் பட்டாளமே உள்ள நிலையில் இவரின் பந்துவீச்சு எதிரணி வீரர்களுக்கு மிகுந்த நெருக்கடியை உண்டாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.