உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றன. உலகக் கோப்பைக்கான 15 வீரர்களைக் கொண்ட அணி விவரத்தை அனைத்து அணிகளும் அறிவித்துள்ள நிலையில், அந்தந்த அணி நிர்வாகங்கல் தங்கள் அணி வீரர்களை தயார்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. பயிற்சி ஆட்டங்கள் மே 24 முதல் மே 28 வரை நடக்க உள்ளது. இங்கிலாந்து ஆடுகளத்திற்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்ள ஒவ்வொரு அணியும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளன. கடந்த உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி மீது அனைவரது பார்வையும் திரும்பியுள்ளன. ஐந்து முறை உலகக் கோப்பையை வென்று, உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி, இம்முறையும் ஆதிக்கம் செலுத்துமா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தனிநபரின் பங்கு மிகவும் முக்கியமானது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தனி நபரின் சிறப்பான ஆட்டம் அந்த அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமையும். தனிநபரின் பங்கினை குறித்து பேசுகையில் விக்கெட் கீப்பர்களின் பங்கு இன்றியமையாதது. பேட்டிங்கிலும், ஸ்டம்பிற்கு பின்னாலும் அவர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானது.
அவ்வாறு, இந்த உலக கோப்பையில் பங்கேற்க உள்ள 3 சிறந்த விக்கெட் கீப்பர்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.
#3. ஜாஸ் பட்லர் :
இங்கிலாந்து அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக சிறந்த முறையில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்து வந்துள்ளார், ஜாஸ் பட்லர். அவர் இதுவரை 127 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3387 ரன்கள் எடுத்துள்ளார். தற்பொழுது சிறந்த பார்மில் உள்ள பட்லர், இங்கிலாந்து அணிக்காகவும், ஐபிஎல்- இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த ஐபிஎல் -இல் ராஜஸ்தான் அணிக்காக 9 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் எடுத்துள்ளார், 150 ஸ்ட்ரைக் ரேட்டிற்க்கு மேல் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பிங்கில் இதுவரை 183 முறை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். நான்கு ஐபிஎல் சீசன்களில் தனது விக்கெட் கீப்பிங்கால் 26 முறை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
மேலும், சொந்த மண்ணில் விளையாட உள்ளதால், அபாயகரமான வீரராக பட்லர் பார்க்கப்படுகிறார். பட்லருக்கு மிகவும் பழக்கப்பட்ட இங்கிலாந்து மண்ணில், அவரது சிறந்த ஆட்டம் இங்கிலாந்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆடக்கூடிய தன்மையையும், ஆட்ட இறுதியில் வேகமாக ரன்கள் சேர்க்கும் ஆற்றலும் கொண்டவராக பட்லர் உள்ளார். ஆகவே, இந்த உலக கோப்பையில் கவனிக்கத்தக்க விக்கெட் கீப்பர்களுள் பட்லரும் ஒரு முக்கிய வீரராக கருதப்படுகிறார்.
#2.குயின்டன் டி காக்:
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த குயின்டன் டி காக், இடது கை பேட்ஸ்மேன் ஆவார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கும் டி காக், இதுவரை 106 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4602 ரன்கள் எடுத்துள்ளார். விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் டி காக், இதுவரை 157 முறை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். ஹாஷிம் அம்லா மற்றும் டி காக் ஜோடி தென் ஆப்பிரிக்கா அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வரும் டி காக், 12 போட்டிகளில் 393 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை பேட்டிங்கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார், டி காக்.
இந்த ஆண்டு இதுவரை 8 சர்வதேச போட்டிகளில் விளையாடி 469 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும். இந்த உலகக் கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என நம்பப்படுகிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளதால் உலகக் கோப்பைக்கான தென்னாபிரிக்க அணியில் தேர்வு செய்யப்பட்டார், டி காக்.
#1.மகேந்திர சிங் தோனி:
இந்த உலகக் கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விக்கெட் கீப்பர் தோனி என்று சந்தேகமே இல்லாமல் கூறலாம். தொடர்ச்சியாக நான்காவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளார், தோனி. இதுவரை 341 போட்டியில் விளையாடி 10500 ரன்கள் எடுத்துள்ளார், தோனி . விக்கெட் கீப்பிங்கில் உலகின் சிறந்த வீரராக கருதப்படும் தோனி இதுவரை 314 கேட்ச்கள் பிடித்துள்ளார். மேலும், தனது விக்கெட் கீப்பிங்கால் 120 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார். ஆட்டத்தை சிறப்பான முறையில் முடிக்கும் 37 வயதான தோனி, இம்முறையும், அதே பணியை பாண்டியா உடன் இணைந்து தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டும் பேட்டிங்கில் சிறந்து விளங்குகிறார், தோனி. இந்தாண்டு 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 327 ரன்கள் அடித்துள்ளார், அதில் 4 அரைசதங்கள் அடங்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இந்த ஆண்டு ஐபிஎல்-இல் 8 இன்னிங்க்சில் 358 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை, இந்திய அணிக்காக பல போட்டிகளை சிறந்த முறையில் முடித்து, வென்று கொடுத்துள்ளார், தோனி. ஆதலால், இந்திய அணியின் மிகவும் முக்கியமான வீரராக தோனி கருதப்படுகிறார். தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு பெரிதும் பயனளிக்கும். மேலும் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பரான தோனி, இந்த உலகக் கோப்பையில் மிகவும் கவனிக்கப்படும் விக்கெட் கீப்பராக திகழ்கிறார்.