உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இருந்த மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்திய அணியின் நான்காமிடத்தில் விளையாடப் போகும் பேட்ஸ்மேன் யார் என்பதைப் பற்றி தான். தொடர்ந்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இடம்பெற்ற அம்பத்தி ராயுடு, இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதால் புதிய வீரர் யாரேனும் ஒருவர் நான்காம் இடத்தில் களமிறக்கப்படலாம் என நம்பப்பட்டது.
கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசை சீட்டு கட்டை போல் சரிந்து கொண்டு இருந்ததை பார்த்தால், முக்கியமான ஒரு வீரர் நான்காம் இடத்தில் களம் இறங்கி அணியை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு அனைத்தும் பதிலளிக்கும் வகையில், 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடரில் நான்காமிடத்தில் விஜய் சங்கர் களமிறக்கப்படலாம் என தேர்வு குழு தெரிவித்திருந்தது. அனுபவம் வாய்ந்த அம்பத்தி ராயுடுவை விட பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் விஜய் ஷங்கரை அணியில் தேர்வு செய்யப்பட்டது பற்றி தேர்வுக்குழு விளக்கம் அளித்திருந்தது. துரதிஷ்டவசமாக இவரும் இந்த இடத்தில் விளையாடுவதற்கு இன்னும் போதிய ஆட்டத்திறனை வெளிப்படுத்திய பாடில்லை.
உலகக் கோப்பை தொடருக்கான இரு பயிற்சி ஆட்டங்களிலும் ராகுல் நான்காம் இடத்தில் களம் இறக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் காயத்தால் அணியில் இடம்பெறாமல் இருந்ததால் ராகுல் நான்காம் இடத்தில் களம் இறக்கப்பட்டார். முதல் போட்டியில் ராகுல் சிறப்பாக செயல்படாமல் இருந்தாலும் நேற்றைய போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்து தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய விஜய் சங்கர் தமது இடத்தை தக்கவைத்துக் கொள்ள இன்னுமே சிறப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
நேற்றைய போட்டியில் இந்திய அணி 50 ரன்களில் இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து கே.எல்.ராகுல் தொடர்ந்து விளையாடினார். விராட் கோலியின் விக்கெட்டிற்கு பின்னர், இந்திய அணி 83 ரன்களை குவித்து இருந்தது. தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய ராகுல் முதல் 17 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். அதன் பின்னர், ஆட்டத்தின் தனது பொறுப்பை உணர்ந்து 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். விக்கெட் கீப்பர் தோனியுடன் சிறப்பாக கைகோர்த்து விளையாடிய ராகுல் தங்களது பார்ட்னர்ஷிப்பில் 164 ரன்கள் குவித்து இருந்தபோது 108 ரன்களில் தமது விக்கெட்டை இழந்தார், ராகுல். மேலும், நேற்றைய போட்டியில் இந்திய அணி 359 ரன்களை குவித்ததற்கு இவரது ஆட்டம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
ராகுலின் அருமையான சதத்திற்கு பிறகு, இந்திய கேப்டன் விராட் கோலி நான்காம் இடத்தில் ராகுல் விளையாடுவதை பற்றி தமது கருத்தை தெரிவித்துள்ளார். ஆட்டம் முடிந்த பிறகு, "நான்காம் இடத்தில் விளையாடிய கே.எல்.ராகுலின் ஆட்டம் எங்களுக்கு நேர்மறையாக உள்ளது. அவர் ரன்களை குவித்தது மிக முக்கியமானதாகும். இம்மாதிரியான வீரரை கொண்டு அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரை மேலும் உயர்த்த உதவும்" என விராட் கோலி கூறினார்.