உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இன்னும் ஒரு மாதகாலமே உள்ள நிலையில், அனைத்து நாடுகளும் தங்களின் அணியின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தற்போது, இதன் தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று வெளியிட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கீரன் பொல்லார்ட், சுனில் நரேன், தேவேந்திரா பிஷூ போன்றோர் அணியில் இடம்பெறவில்லை. அனுபவமிக்க வீரர்களான கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச் போன்றோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். சிம்ரோன் ஹெட்மேயர், நிக்கோலஸ் பூரான், கரோலஸ் பிராத்வெயட் போன்றோரும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.
எனினும், மூன்று உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் கொண்ட மார்லன் சாமுவேல்ஸ் அணியில் இடம்பெறாதது மிகுந்த வேதனையளிக்கின்றது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுவதற்கு இவரே முக்கியமான காரணமாகும். அதுமட்டுமல்லாது ஜிம்பாப்வேக்கு எதிரான வாழ்வா - சாவா? போட்டியில் 81 ரன்களை விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். அசாத்திய திறமை கொண்ட இவர், ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் மழை குறுக்கிட்டது. ஸ்காட்லாந்து வெற்றி பெற்ற போதிலும் 51 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கையே திசை திருப்பினார்.
1970-களில் 60 ஓவர் உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றது, வெஸ்ட் இண்டீஸ். அதற்குப் பின்னர், 2004 சாம்பியன்ஸ் டிராஃபி, 2012 மற்றும் 2016-இல் நடைபெற்ற சர்வதேச 20 ஓவர் உலக கோப்பை போன்றவற்றில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. அதற்குப் பின்னர் இந்த அணியின் பேட்டிங் லைனில் பெரிதான ஆட்டக்காரர்கள் இல்லை. இது அந்த அணிக்கு பெரிதும் தோல்வியையே தந்தது.
2012 சர்வதேச 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கூட 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது, வெஸ்ட் இண்டீஸ் அணி. இருப்பினும், அந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சாமுவேல்ஸ் 56 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். மேலும், ஸ்ரீலங்காவின் நம்பிக்கை நட்சத்திரமான லசித் மலிங்கா ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர்களை இவர் விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி, 2016-ஆம் ஆண்டு சர்வதேச 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் கூட 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இவரும் கிறிஸ் கெயிலும் சேர்ந்து ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 372 ரன்கள் எடுத்ததே இதுவரை முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது. அதுமட்டுமல்லாது, இங்கிலாந்து சூழ்நிலைகளில் நன்கு விளையாட கூடிய இவர், ஒரு நல்ல ஆல்ரவுண்டர் ஆவார்.
இவர் இதுவரை ஒருநாள் போட்டிகளில் 10 சதங்களும், 89 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவ்வளவு திறமைமிக்க இந்த ஆட்டக்காரர் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 4 தொடர்களில் வெறும் 61 ரன்களையே குவித்துள்ளார் என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காயம் கண்டதால் இவர் அணியில் இடம் பெறாததற்கு காரணமாக இருக்கலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எதுவாக இருப்பினும் , இவரின் பங்களிப்பு இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.