கடந்த சில ஆண்டுகளில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் ஒரு சிறந்த பலமான வீரர்களை உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறச் செய்துள்ளனர். பலமான, அனுபவமிக்க, தற்போது ஃபார்மில் இருந்து வரும் வீரர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி கொண்டுள்ளது. சமீப காலமாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அனைத்து தரப்பிலான சர்வதேச போட்டிகளிலும் சற்று தடுமாறி வந்தது. சில தவறான ஒப்பந்தங்களால் இம்மாதிரியான தடுமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால், ஒரு தகுதியான வெஸ்ட் இண்டீஸ் அணியை தேர்வு குழுவினர் தேர்வு செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆட்டத்தின் வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்த வீரர்களான கிறிஸ் கெய்ல், ஆந்திரே ரசல், சுனில் நரின் போன்ற அனுபவ வீரர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச போட்டிகளில் தங்களது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இந்த அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான வெய்ன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் மேற்கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக சர்வதேச அனைத்து தரப்பு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். ஆனால், இவர் உலகம் முழுவதும் நடைபெற்று டி20 தொடர்களில் விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுகுழு சிறந்ததொரு அணியை உருவாக்க திட்டமிட்டது. அதன்பேரில், சில காரணங்களால் கீரன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் மற்றும் தேவேந்திர பிஷூ ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும், சுனில் நரின் மற்றும் அல்ஜாரி ஜோசப் ஆகியோருக்கு ஏற்பட்ட விரல் மற்றும் தோள்பட்டை காயங்கள் காரணமாக இந்த அணியில் இடம்பெறவில்லை.
இந்த இளம் மற்றும் அனுபவ வீரர்களை சரியான கலவையில் கொண்டுள்ள 15 பேர் கொண்ட உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்பார்த்தபடி ஜாசன் ஹோல்டர் வழி நடத்த உள்ளார். "யுனிவர்சல் பாஸ்" என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல், எவன் லீவிஸ் உடன் இணைந்து தொடக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்க போகின்றனர். மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில், டேரன் பிராவோ, சாய் ஹோப் மற்றும் சிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் களமிறங்கவுள்ளனர். அணியில் இடம் பெற்றுள்ள விக்கெட் கீப்பரான சாய் ஹோப்புக்கு மாற்று விக்கெட் கீப்பராக நிக்கோலஸ் பூரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பௌலிங் மற்றும் பேட்டிங்கில் திறன் படைத்த பல்வேறு ஆல்ரவுண்டர் களை இந்த அணியில் இணைத்துள்ளது, வெஸ்ட்இண்டீஸ் தேர்வுக்குழு. நடப்பு 2019 ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கி வரும் வீரரான ஆந்திரே ரசல் பேட்டிங்கில் 392 ரன்களை 218 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார். இவரது மலைக்க வைக்கும் பேட்டிங் இங்கிலாந்தில் நிச்சயம் எடுபடும். இவர் மட்டுமல்லாது, அணியில் உள்ள பிற ஆல்ரவுண்டர் களான பிராத்வெய்ட், ஜாசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன் ஆகியோரும் தங்களது கணிசமான பங்களிப்பை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அளிக்க முற்படுவர். பந்துவீச்சில் தனித்துவ சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்லி நர்ஸ் இடம்பெற்றுள்ளார். மேலும், வேகப்பந்துவீச்சில் எதிரணியினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கெமர் ரோச், ஷேனன் கேப்ரியல், ஓசோன் தாமஸ் மற்றும் செல்தான் காற்றில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மிகவும் பலமிக்க ஆட்டத்திற்கு வெற்றியைத் தரக்கூடிய பல வீரர்கள் இந்த உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர். சில காரணங்களால் இந்த அணியின் கேப்டனான ஜாசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டதற்கு சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் தற்போதைய ஃபார்ம் ஆட்ட திறமை மற்றும் ஃபிட்ன்சை கருத்திற்கொண்டு இந்த அணியில் இடம் பெற்ற வீரர்கள் அனைவரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன் அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் உடன் இணைந்து விளையாடும் முத்தரப்பு தொடர் தொடங்குவதற்கு முன்பு மேற்குறிப்பிட்டுள்ள சோதனைகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலமான அணியை கொண்டு உள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்த உலக கோப்பை தொடரில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி கோப்பையை வெல்வார்களா என்பதை சற்று காத்திருந்து பார்ப்போம்.
உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்ஸல், ஆஷ்லி நர்ஸ், பிராத்வெய்ட், கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, எவின் லீவிஸ், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், நிக்கோலஸ் பூரண், ஷேனன் கேப்ரியல், ஓசோன் தாமஸ், சாய் ஹோப். ஷெல்டான் காட்ரெல்,சிம்ரோன் ஹெட்மயர் .