உலகின் சிறந்த பௌலராக வலம் வந்த டேல் ஸ்டெய்ன் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். தனது அதிரடி வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த ஸ்டெய்ன், தற்போது தனது முழு கவனத்தையும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் மீது செலுத்தியுள்ளார்.
டேல் ஸ்டேயின் பந்துவீச்சு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. இவர் இரு வேறு வகையில் தனது ஸ்விங் பௌலிங்கை வெளிப்படுத்துவார். அத்துடன் தனது வேகத்தின் மூலம் பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பார். இவரது மரண அவுட்-ஸ்விங் மற்றும் "செய்ன்ஷா" விக்கெட் கொண்டாட்டம் போன்றவை மூலம் உலகில் உள்ள பெரும்பாலான ரசிகர்களை ஸ்டெய்ன் கவர்ந்தார்.
டேல் ஸ்டெய்ன் ஓய்வு பெற்றதால் தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட டெஸ்ட் அணியாக தென்னாப்பிரிக்கா திகழ்கிறது.
டெஸ்ட் விளையாடும் 9 அணிகளுக்கு எதிராகவும் 5-விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே பௌலர் டேல் ஸ்டெய்ன். இவர் மொத்தமாக 93 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 439 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஆல்-டைம் டெஸ்ட் பௌலர்களில் இவர் 8வது வீரராக உள்ளார். டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 முறை 5 விக்கெட்டுகளையும் 5 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
நாம் இங்கு டேல் ஸ்டெய்னின் 3 சிறந்த டெஸ்ட் பௌலிங்கைப் பற்றி காண்போம்.
#1 7/51 vs இந்தியா, நாக்பூர் 2010
ஸ்டெய்ன் அனைத்து மைதானங்களிலும் சிறந்த பௌலிங்கை வெளிபடுத்தும் திறன் கொண்டவர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய மைதானங்களில் மட்டுமல்லாமல் துணைக்கண்ட மைதானங்களிலும் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்தி பேட்ஸ்மேன்களை பதற வைத்துள்ளார். குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்களை தனது ரிவர்ஸ் ஸ்வீங் மூலம் தடுமாறச் செய்துள்ளார்.
2010ல் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிக்கொணர்ந்தார்.
இந்த போட்டியில் இவர் வீழ்த்திய முதல் விக்கெட் முரளி விஜய். ஸ்டெய்ன் வீசிய இன்-ஸ்விங் பௌலிங்கை முரளி விஜய் எதிர்கொள்ள தவறியதால் ஸ்டம்பில் அடித்தது. அடுத்ததாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், ஸ்டெய்ன் வீசிய லேட் அவுட் ஸ்விங்கை சரியாக எதிர்கொள்ளததால் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் பந்து சென்றது.
பின்னர் ஸ்டெய்ன் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பந்துவீச வந்து கடைநிலை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளான கடைசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் இந்த இன்னிங்ஸில் 51 ரன்களை மட்டுமே அளித்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அண்டை கண்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டெய்னின் அற்புதமான ஆட்டத்தின் மூலம் அப்போதைய இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியால் புகழப்பட்டார். அவர் கூறியதாவது, "கடந்த இரு வருடங்களில் நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த பௌலர் ஸ்டெய்ன். அவரது அதிரடி பௌலிங் பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்கிறது".