தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் 2019 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகியுள்ளார். இவர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தென்னாப்பிரிக்க மருத்துவக் குழு முழு கண்காணிப்புடன் மருத்துவம் செய்து வந்ததது. இருப்பினும் அது பயனளிக்காத காரணத்தால் உலகக் கோப்பை தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக மோதிய போது டேல் ஸ்டெய்ன் இடம்பெறவில்லை. அணி நிர்வாகம் டேல் ஸ்டெய்ன் 85 % குணமடைந்து விட்டதாகவும், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இடம்பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் குணமடையாத காரணத்தால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அனல் வேக பந்துவீச்சாளர் ப்யூரன் ஹன்ரிக்ஸ் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னிற்கு பதிலாக தென்னாப்பிரிக்க உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். ஹன்ரிக்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இருப்பினும் இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அல்ஜாரி ஜோசப்-பிற்கு மாற்று வீரராக ஹன்ரிக்ஸ் இடம்பெற்றார். ஆனால் ஒரு போட்டியில் கூட இவர் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹன்ரிக்ஸிற்கு போதுமான அளவு சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் இல்லை.
தென்னாப்பிரிக்க அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இது இருக்கும் என்பது சந்தேகமில்லை. ஏற்கனவே இந்த அணி வீரர்களின் காயங்களுக்கு எதிராக போராடி வருகிறது. லுங்கி நிகிடிக்கு தொடையில் ஏற்பட்ட காயத்தால் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நிகிடி வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களை மட்டுமே வீசினார். அதற்கு மேல் அந்த போட்டியில் அவரால் விளையாட இயலவில்லை.
மேலும் அனுபவ பேட்ஸ்மேன் ஹாசிம் அம்லா வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை. 2019 உலகக் கோப்பையில் இங்கிலாந்திற்கு எதிரான முதல் போட்டியில் ஜோஃப்ரா ஆர்சர் வீசிய பந்து நேரடியாக அம்லாவின் தலைக்கவசத்தை தாக்கியது. இதனால் அவர் அந்த போட்டியில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.
தென்னாப்பிரிக்க அணி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. ஃபேப் டுயுபிளஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி இவ்வருட உலகக்கோப்பை தொடரை சரியாக எதிர்கொள்ளவில்லை. இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் இரு போட்டிகளிலுமே தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா. இங்கிலாந்திற்கு எதிரான முதல் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்திலும், வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவியது தென்னாப்பிரிக்கா அணி.
வலிமையான இந்திய அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணி 2019 உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் பங்கேற்க இருப்பதால் இந்தப் போட்டியில் ஆரவாரத்திற்கு பஞ்சமிருக்காது. தென்னாப்பிரிக்க அணி தனது மூன்றாவது உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை ஜுன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது.