IPL சீசன் 11 அடுத்த வருட முற்பகுதியில் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இத்தொடர் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்ததுள்ளது. உலகின் பல அணிகளிலிருந்தும் முன்னணி வீரர்கள் இதில் கலந்து கொண்டு விளையாடிதே இதன் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கான வீரர்களுக்கான ஏலம் இந்த மாதம் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. முன்னதாக வீரர்களை தக்கவைத்து கொள்ள வேண்டிய இறுதி நாளில் பல அணிகளில் இருந்தும் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். சில அணிகள் இரண்டு மூன்று வீரர்களை தங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொண்டனர்.
ஏலத்திற்கு இரண்டு வாரமே இருக்கும் நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு என்னவென்றால் டெல்லி டேர்டெவில்ஸ் தனது அணியின் பெயரை டெல்லி கேபிட்டல்ஸ் என மாற்றியது தான். இதுவரை கோப்பை வெல்ல முடியாத அணியாக இருந்து வரும் இந்த அணி, வருடா வருடம் பல வகையான மாற்றங்களை செய்து வந்தது. இவ்வருடம் ஒரு படி மேலே போய் அதன் பெயரையே மாற்றி அறிவித்திருக்கிறது டெல்லி அணி நிர்வாகம். அவர்களது சின்னமாக மூன்று புலித்தலைகள் உள்ளவாறு கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளில் இது டெல்லியின் மூன்றாவது சின்னம். இதற்கு முன் 2012ம் ஆண்டு ஹைதெராபாத்தை சேர்ந்த டெக்கான் சார்ஜ்ஜர்ஸ் அணி தனது பங்கை விற்றவுடன் அதன் புது நிர்வாகம் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் என பெயரை மாற்றியது.
கடந்த ஒரு வாரமாகவே டெல்லி அணியின் ட்விட்டர் பக்கத்தில் பல செய்திகள் வந்தவாறு இருந்தது. அதிலே வரும் டிசம்பர் 4ம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வரும் என்று ட்வீட் போடப்பட்டது. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுகும் அது என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். அதனை தொடர்ந்து இன்று புது டில்லியில் இதற்கான விழாவை அந்த அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ட்விட்டர் மற்றும் பல சமூக வலைத்தளங்களில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இளம் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டார். சென்ற வருட முதற்பாதியில் கவுதம் காம்பிர் கேப்டனாகவும், இரண்டாம் பாதியில் ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாகவும் செயல்பட்டனர். சென்ற மாதம் ஹைதெராபாத் அணியில் இருந்து டெல்லி அணிக்கு சென்றார் ஷிகர் தவான். டில்லியை சேர்ந்த இவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்த்த நிலையில் இச்செய்தி இவரின் ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றமே. பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தொடர்வார் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. துணை பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வீரர் முஹம்மது கைஃப் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் ஹைதெராபாத் அணியில் இருந்து கோப்பை வென்ற தவானின் வழிகாட்டுதலின் பேரில் ஷ்ரேயாஸ் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கோப்பை வெல்லும் முனைப்பில் சில மாறுதலோடு களமிறங்கும் டெல்லி அணிக்கு வரும் வருடம் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.