ஒரு எளிமையான புள்ளி விபரத்திலிருந்து ஆரம்பிப்போம். இதுவரை இந்த உலக கோப்பையில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித சர்மா, மூன்று சதங்கள் உள்பட 440 ரன்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த உலக கோப்பையில் அதிக ரன் அடித்தோர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இவரை தவிர இந்தப் பட்டியலில் உள்ள மற்றொரு பேட்ஸ்மேன் கோலி (382 ரன்) மட்டுமே.
இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் உள்ளது. ஆறு போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 1716 ரன்கள் அடித்துள்ளது. இதில் ரோகித் மட்டுமே 25.6 சதவிகித ரன்களை அடித்துள்ளார். கோலியின் பங்கு 22.2 சதவிகிதம். நம் இந்திய அணி எந்தளவிற்கு மலைபோல் இரு பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பியுள்ளது என்பது இதிலிருந்தே தெரிகிறது. இது இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கண்கூடாக தெரிந்தது.
வழக்கமாக இந்த உலக கோப்பையில் ஆரம்பத்திலிருந்தே தொடக்க பேட்ஸ்மேன்கள் கடைசி வரை ஆட முற்படுகிறார்கள். தற்போது ஷிகர் தவானும் விலகிவிட்டதால், மொத்த சுமையும் ரோகித சர்மா மீது விழுந்துள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை முழுமையாக நம்ப முடியாத காரணத்தினால் எல்லா போட்டிகளின் முடிவும் இந்த இரு வீரர்களை நம்பியே உள்ளது.
ரோகித சர்மாவும் விராத் கோலியும் பொறுப்பான மற்றும் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருவருமே போராட்ட குணம் மிக்கவர்கள். அதனால் அவ்வுளவு எளிதில் எதையும் விட்டுக் கொடுத்து விடமாட்டார்கள். ஆனால் இருவரையும் மட்டும் நம்பினால் நம்மால் உலக கோப்பையை வெல்ல முடியாது என்பதை நியாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் இப்படி கூறுவதை ரோகித் சர்மா ஒத்துக்கொள்ள மாட்டார். ஏனென்றால், தன் கேரியரின் உச்சகட்ட ஃபார்மில் உள்ளார் ரோகித். தன்னால் எவ்வுளவு ரன் அணிக்கு அடிக்க முடியுமோ அதை அடிப்பதற்கு தயாராக உள்ளார். கடினமான பிட்ச்சில் தனது வழக்கமான ஆட்டத்தை மாற்றி மெதுவாக விளையாடும் ரோகித் சர்மாவை தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் பார்த்தோம். 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் அவரிடம் அன்று தென்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோகித்தின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஒரு சீரியஸுக்கு ஒரு சதம் அடித்துவிட்டு மற்ற போட்டிகளில் குறைவான ரன்களை அடிப்பார். ஆனால் இப்போதோ, அரை சதம் நூறாகவும், நூறு இரட்டை சதமாகவும் மாற்றுகிறார். இந்திய அணி இரண்டாவது பேட்டிங் பிடிக்கும் போது இவரது பேட்டிங் அணுகுமுறை முற்றிலும் மாறி விடுகிறது. போட்டியை தான் முடித்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்.
ரோகித்தின் ஒரு நாள் கேரியரில், அவர் அரைசதம் அடித்த 45 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இந்த வெற்றியின் போது இவரது பேட்டிங் சராசரி 155.41. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது 2017 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து கணக்கிட்டால், ரோகித சர்மா அரைசதம் அடித்த 20 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இதில் அவரது சராசரி 181.33. அதிலும் இந்தியா இலக்கை துரத்தும் போது இவரது பேட்டிங் ஆவரேஜ் 231.20 ஆக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ரோகித் சர்மா.