ஐபிஎல் 2019ம் ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின்முடிவில் அடுத்த ஐ.பி.எல். தொடரில் உங்களை மீண்டும் காண முடியுமா? என்று டோனியிடம் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "ஆம், நம்பிக்கை இருக்கிறது" என்று பதில் அளித்தார்.
சென்னை அணிக்காக அடுத்த ஆண்டும்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவற விட்ட பிறகும் தோனியையும் சென்னை அணியையும் சென்னை அணியின் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தோல்விக்குப் பிறகு தோனி பேசியது ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது. அடுத்த ஐபிஎல்லில் சென்னை அணிக்காக ஆடுவேன் என தோனி பேசியிருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறலாம் என்று கருத்துக்கள் உலவி வந்தது.
இந்த ஐபிஎல்லில் தோனி ஆடாத இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த ரெய்னா தோனி ஓய்வு பெற வாய்ப்பு இருப்பதாக சூசகமாக கூறியிருந்த நிலையில் தோனியின் வார்த்தைகள் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து இருக்கிறது. தோனி இல்லாமல் சென்னை அணி முழுமைபெறாத அணியாக இருப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
தோனி இருந்தால் தான் போட்டியை வெல்ல முடியும் என்பது போன்ற எண்ணம் சென்னை அணி வீரர்களுக்கும் இருப்பதால் அவர்களுக்கும் தோனி விளையாடுவார் என்ற வார்த்தை உற்சாகமளிப்பதாக உள்ளது. ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவே இருக்கிறது. தோனி இல்லாத சென்னை அணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
உலகக் கோப்பை தான் முக்கியம்
அதே நேரத்தில் ஐபிஎல் தோல்வி கூறித்து ஆராய வேண்டுமா என கேட்கும் போது, உலகக்கோப்பை போட்டிகளுக்கு உடனடியாக தயாராக வேண்டியிருப்பதால் ஐபிஎல் தோல்வி குறித்து ஆராய்ந்து கொண்டிருக்க நேரம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். தன்னுடைய ஓய்வு குறித்து பேச தோனி தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முக்கியமான ஆளாக தோனி இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
உலகக் கோப்பைக்கு பின்னும் இந்திய அணியில் தொடர்வாரா?
தோனி ஓய்வு பெற வேண்டும் என பல நாட்களாக ஒலித்த குரல்களும் வெகுவாக குறைந்து இருக்கின்றன. காரணம் 2019 ஆம் ஆண்டில் தோனியின் செயல்பாடுகள் ரசிகர்களை கவர்ந்து இழுக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த சராசரி கொண்ட வீரராக திகழ்கிறார். மேலும் கேப்டன் கோலிக்கு உறுதுணையாக தோனி செயல்படுவதும் அணிக்கு வலு சேர்க்கிறது. இப்போது ரசிகர்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்வி அவர் 2019 உலகக்கோப்பைக்கு பின்னும் அணியில் தொடர்வாரா என்பது தான்? ஆனால் தோனி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாலும் அவர் இந்திய அணிக்கு தேவை என நிர்வாகம் நினைப்பதாலும் உலகக்கோப்பைக்கு பின்னும் அவர் அணியில் தொடரவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துகின்றனர்.