2019ஆம் ஆண்டினை சிறப்பாக தொடங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. ரன்களை சேஸ் செய்வதில் சிறந்த வீரராக திகழ்கிறார். அவரது சராசரி பற்றியும் சிறந்த சேஸ் செய்யும் வீரர்களில் அவருக்கு எந்த இடம் என்பதை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்
#நான்காவது இடத்தில் ஏ பி டி வில்லியர்ஸ்!!
சேஸிங்கில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் நம் ஏ பி டி வில்லியர்ஸ் நான்காவது இடத்தில் உள்ளார். MR.360 என்று அழைக்கப்படும் நம் ஏ பி டி வில்லியர்ஸ் சேஸிங்கில் 59 போட்டிகளில் 2566 ரன்களை அடித்துள்ளார். எனவே அவரது சராசரி 82.77. இவர் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்றாலும் நம் இந்தியாவிலும் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர். தனது பேட்டிங்கின் மூலம் அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் தன்வசப்படுத்தி உள்ளார். இவர் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#மூன்றாவது இடத்தில் மைக்கேல் பெவன்!!
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் மைக்கேல் பெவன். இவர் சேஸிங்கில் 45 போட்டிகளில் 1725 ரன்களை எடுத்துள்ளார். இவரது சராசரி 86.25 ஆகும். இவர் ஏ பி டி வில்லியர்ஸ்யை விட அதிக சராசரி வைத்துள்ளதால் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
#இரண்டாவது இடத்தில் இந்தியாவின் கேப்டன் கோலி!!
சேசிங்கின் சிறந்த வீரர்களின் பட்டியலில் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். சேசிங் என்றாலே இந்தியா தான் வெற்றி பெறும் என்று ஒரு நிலையை உருவாக்கியதற்கு முக்கிய காரணம் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். பல போட்டிகளில் இறுதிவரை நின்று விளையாடி பல வெற்றிகளை தேடித் தந்தவர். நம் இந்திய அணியில் சிறந்த வீரராக திகழும் இவர் பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். இவர் சேஸிங்கில் 77 போட்டிகளில் 4853 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 99.04 ஆகும். சேஸிங்கில் அதிக சதம் அடித்தவர் இவர் மட்டும் தான். இதுவரை சேஸிங்கில் இவர் 21 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#முதல் இடத்தில் தோனி!!
இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் தோனி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த வருடம் இவருக்கு சிறப்பாக அமையவில்லை. இவர் கடந்த வருடத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு இவருக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தான் விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் அரை சதம் விளாசினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்றது. அதில் மிகவும் பொறுமையாக விளையாடி அரைசதம் அடித்து அவுட் ஆகி விட்டார். இதனால் பலரது விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதிய 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியாக அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தப் போட்டி அவருக்கு அமைந்தது. சேஸிங்கில் இவரது சராசரி 99.85 ஆகும் . இதன் மூலம் சிறந்த சேசிங் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் தோனி.