இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்டில் நம்பர் 1 ரேங்கிங் என அவர் புரிந்த சாதனைகள் எண்ணற்றவை. அவரின் இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் நெருக்கடியான தருணங்களில் அவர் எடுத்த சிறப்பான முடிவுகள் தான். அவரை சுத்தமாக வெறுப்பவர் கூட மறுக்க முடியாத விஷயம் , தோனியின் கூர்மையான கிரிக்கெட் அறிவு தான். இந்தியா பல நாக் அவுட் போட்டிகளில் பின்தங்கி இருந்த பொழுது தோனி எடுத்த முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றி இந்திய அணி வெற்றிப் பெற உறுதுணையாக இருந்தது. அவ்வாறு அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய தோனியின் 5 முடிவுகள் இதோ,
#5 பவுல்-அவுட்டில் உத்தப்பாவை பவுலிங் செய்ய சொன்னது ( Asking Uthappa to bowl in bowl-out)
2007 உலக கோப்பையில் இரண்டு முறை பாகிஸ்தானுடன் மோதியது இந்தியா. அதில் பைனலை யாராலும் மறக்க முடியாது. ஆனால், குரூப் ஸ்டேஜ் போட்டியும் மிகவும் த்ரில்லாக இருந்தது. அப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 141 ரன்கள் எடுத்தது. பைனலைப் போலவே இப்போட்டியிலும் மிஸ்பா அபாரமாக ஆடினார் . ஆனால், இறுதியில் போட்டி டை ஆனது. அப்பொழுது இருந்த விதிகளின் படி வெற்றியாளரை தீர்மானிக்க இரு அணிகளும் பவுல்-அவுட்டில் பங்கேற்றனர். பாகிஸ்தான் அணி சார்பில் பவுலிங் செய்த யாருமே ஸ்டம்ப்ஸை தகர்க்கவில்லை. தோனி ஸ்பின்னர்கள் ஸ்டம்ப்ஸை தகர்ப்பது எளிது என புரிந்து கொண்டு சேவாக்,ஹர்பஜன் மற்றும் ஆச்சரியப்படும் வகையில் உத்தப்பாவிடம் பவுலிங் பொறுப்பை தந்தார். அவர்களும் ஸ்டம்ப்ஸை தகர்த்து இந்திய அணிக்கு வெற்றித் தேடி தந்தார்.
#4 2013 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இஷாந்தை பவுலிங் செய்ய சொன்னது ( Giving CT 2013 final 18th over to Ishanth Sharma )
2013 சாம்பியன்ஸ் டிராபி-இல் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கு தகுதிப் பெற்றது. ஆனால், மழைக் காரணமாக போட்டி 20 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் என்பது 20 ஓவர் போட்டியில் மிகவும் எளிது. ஆனால், தோனி திறமையோடு பவுலர்களை ரோடேட் செய்து இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுபடுத்தினார். ஜடேஜா மற்றும் அஷ்வின் நன்றாக பவுலிங் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென இஷாந்தை பவுலிங் செய்ய அழைத்தார். 18- ஆவது ஓவரை வீசிய இஷாந்த், போபரா மற்றும் மார்கனின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இறுதியில்,இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
#3 புஜாராவை நம்பர் 3-க்கு ப்ரமோட் செய்தது ( Promoting Pujara to number 3 on debut )
2010-இல், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பினார் புஜாரா. யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாம் இன்னிங்சில் புஜாராவை நம்பர் 3-இல் களமிறக்கினார் தோனி. ஜாம்பவான் டிராவிட் இருந்த பொழுதும் தோனி புஜாராவை நம்பியது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். புஜாராவும் தோனி தன் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் நன்றாக ஆடி 72 ரன்கள் குவித்தார். இந்தியா அப்போட்டியில் வெற்றிப் பெற்று பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றது.