இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய அணியின் விக்கெட் கீப்பராக விளங்குபவர் மகேந்திர சிங் தோனி. இவர் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஆட்டத்தை பினிஷ் செய்ததின் மூலம் சிறந்த பினிசர் என்று அவரது ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவரால் பல ஆட்டங்களில் பினிஷ் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது என்பது மறைக்கப்பட்டு வரும் உண்மை. அவ்வாறு அவரால் பினிஷ் செய்ய முடியாமல் இந்திய அணி தோல்வியடைந்த ஆட்டங்களில் சிலவற்றை இங்கு காணலாம்.
#) 2007 இந்தியா - இலங்கை 2வது ஒருநாள் போட்டி
2007 ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 257 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குமார் சங்ககரா சதமும், தில்சன் அரைசதமும் விளாசினர். பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் அரை சதமடித்தனர்.
இறுதியில் கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. தோனி மற்றும் அனில் கும்பிளே களத்தில் இருந்தனர். இலங்கை வீரர் ஜெயசூர்யா பந்து வீசினார். முதல் பந்தில் தோனி அனில் கும்பிளேவை ரன் அவுட் ஆக்கினார். பின் 5 பந்துக்கு 10 ரன்கள் தேவைபட்டன. அடுத்த இரண்டு பந்துகளில் அவர் ரன் எதுவும் அடிக்கவில்லை. பின் 3 பந்திற்கு 10 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பந்தில் தோனி 4 ரன்கள் அடிக்க , கடைசி இரண்டு பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது தோனி அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
#) 2009 டி20 உலக கோப்பை
2009 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கெவின் பீட்டர்சன் 46 ரன்களும், ரவி போபரா 37 ரன்களும் குவித்தனர். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணி வீரர்கள் கம்பீர் 26 ரன்கள், ஜடேஜா 25 மற்றும் யுவராஜ் 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 14 வது ஓவரில் தோனி மற்றும் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிலைத்து ஆடினர். கடைசி இரண்டு ஓவர்களுக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 9 ரன்கள் மட்டுமே குவித்தனர்.
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. சைட்பாட்டம் வீசிய முதல் பந்தில் ஒரு ரன் அடித்து பதான் தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். 5 பந்துகளில் 18 ரன்கள் அடிக்கவேண்டி இருத்த நிலையில் தோனி 2வது பந்தில் 2 ரன், 3வது பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து இந்திய அணியை தோல்வி பெற வைத்தார். பின் 3 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் பதான் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் வெறும் ஒரு ரன் மட்டுமே எடுக்க இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரு பெரிய பேட்ஸ்மேன்கள் களத்தில் அவுட் ஆகாமல் இருந்தும் இந்திய அணியால் 153 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் போனது. இதனால் இந்திய அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
மற்ற ஆட்டங்களை அடுத்த தொகுப்பில் காணலாம்.