தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா-விற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் கடைசி இரண்டு போட்டிகளிலும் தோனி மேட்சை பினிஷ் செய்து அசத்தினார். இந்த தொடரில் அவர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தோனி கடைசி இரண்டு ஆட்டங்களில் நேர்மை தவறியதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதைப்பற்றி விரிவாக இங்கு காணலாம்.
இரண்டாவது போட்டியில் எடுக்கப்பட்ட தவறான ரன்…
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சதம் விலாச , தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி ஆட்டத்தை முடித்து வைத்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழல் பந்து வீச்சாளர் நாதன் லையன் வீசிய 45வது ஓவரின் இறுதிப் பந்தை சந்தித்த தோனி ஒரு ரன் அடித்தார். அப்போது அவர் நான்-ஸ்ரைக்கர் என்டில் உள்ள எல்லைக் கோட்டைத் தொட தவறினார். ஆனால் இதை களத்தில் இருந்த நடுவரும், எதிரணி வீரர்களும் கவனிக்கத் தவறினர். அதனால் தோனிக்கு ஒரு ரன் வழங்கப்பட்டது. இந்த ரன் தவரானது என இணையதளத்தில் வீடியோ வைரல் ஆனது. இதனை அறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இதை பெரிதும் வர்ணனை செய்தனர். தோனி தனது கவனக் குறைவினால் எல்லையை தொட மறந்தார். இது போன்று பல நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்ந்துள்ளன என இதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் செய்த செயல் அவர் நேர்மையின்றி விளையாடுபவர் என்ற விமர்சனம் உண்டாக்கியுள்ளது.
கடைசி ஒருநாள் போட்டியில் அவுட் ஆகியும் வெளியேறாதது..
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோனியின் தவறான ரன் பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நிலையில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது. சஹால் 6 விக்கெட் வீழ்த்தி அசத்த, கேதர் ஜாதவ் மற்றும் தோனி கூட்டணி போட்டியை நிறைவு செய்தனர். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிட்டில் வீசிய 29 வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தோனியின் மட்டையில் உறசிய பந்தை விக்கெட் கீப்பர் பிடித்தார். ஆனால் இதை அம்பையர் நாட் அவுட் என அறிவித்தார். ஆஸ்திரேலிய அணியின் வீரர்களும் இதற்கு ரிவ்யூ மேற்க்கொள்ளவில்லை. இதனால் தோனி அவுட் ஆகாமல் தப்பித்தார்.
இவ்வாறு தான் அவுட் என தெரிந்தும் களத்தை விட்டு வெளியேறாமல் களத்திலேயே நின்ற தோனியின் நடவடிக்கை சரியில்லை என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர்.
சச்சின் டெண்டுல்கர் தன் அவுட் என உணர்ந்ததும் அம்பையர் கூறும் முன்னே தானாக களத்தை விட்டு வெளியேறுவார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்திய அணியில் உள்ள மூத்த வீரரான தோனி இவ்வாறு செய்தது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவலையை உண்டாக்கி உள்ளது.