இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான 'எம்.எஸ்.தோனி' தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் தனது மோசமான பேட்டிங்கால் கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 52 பந்துகளை எதிர்கொண்டு 28 ரன்கள் சேர்த்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிக்காக போராடாமல் கடைசி 5 ஓவர்களில் மந்தமான பேட்டிங்கை தோனி வெளிப்படுத்தியது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் வெளிப்படையாகவே தோனியின் இந்த மந்தமான பேட்டிங்கை பற்றி விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான புள்ளி விவரப்படி இந்த உலகக் கோப்பை 2019-ல் மிக மோசமான விக்கெட் கீப்பர்கள் வரிசையில் இந்திய அணி விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனி 3-ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இது இந்திய ரசிகர்கள் குறிப்பாக தோனி ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகத் திகழும் தோனி, இந்த உலக கோப்பையின் 3-வது மோசமான விக்கெட் கீப்பராக எப்படி இடம் பெற்றார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் வரலாம். இதற்கு சில புள்ளி விவர கணக்கை நாம் காண வேண்டியுள்ளது.
இந்த உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக தோனி 19 பை ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இது நிச்சயம் ஒரு மோசமான செயல்பாடாகும். மேலும் இந்த உலக கோப்பையில் 6 இன்னிங்சுகளில் வெறும் 4 விக்கெட் இழப்புக்கு மட்டுமே இவர் காரணமாக இருந்துள்ளார். அதில் 2 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங் ஆகும்.
வழக்கமாக டி.ஆர்.எஸ் (DRS) முறையில் அப்பீல் கேட்பதில் தோனி மிகவும் கை தேர்ந்தவர். தோனியின் ஒப்புதலுக்கு பிறகே கேப்டன் 'விராட் கோலி' டி.ஆர்.எஸ் முறையில் அப்பீல் கேட்பது வழக்கம். ஆனால் இந்த உலக கோப்பையில் அதிலும் இரண்டு முறை தவறிழைத்தார் தோனி.
குறிப்பாக கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 'ஹர்திக் பாண்டியா' வீசிய பந்து இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராயின் கையில் உரசியபடி சென்று தோனி கையில் கேட்சாக தஞ்சம் அடைந்தது. ஆனால் கள நடுவர் அவுட் கொடுக்க மறுக்கவே, கேப்டன் கோலி தோனியின் உதவியை நாடினார். ஆனால் தோனி அது அவுட் இல்லை என்பதாக சொல்ல கோலி ரிவியூ கேட்பதை கைவிட்டார். ஆனால் ரீ-பிளேவில் அது அவுட் என தெரிந்ததும் அனைவரும் நொந்து போனார்கள். இங்கிலாந்து அணி அந்த வாய்ப்பை பயன்படுத்தி மிகச்சிறந்த ஒரு தொடக்க ஜோடி பார்ட்னர்ஷிப்பை அமைத்து போட்டியை வென்றது.
இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் 'அலெக்ஸ் கேரி' உள்ளார். இவர் மொத்தம் 18 விக்கெட் இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளார். இந்த பட்டியலில் தோனிக்கு முன்பாக மோசமான விக்கெட் கீப்பர்களாக ஆப்கானிஸ்தான் அணியின் 'இக்ரம் அலிகில்' மற்றும் 'முஹம்மது ஷெஷாத்' உள்ளனர்.
பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் மோசமான நிலைமையில் உள்ள தோனி இந்த உலக கோப்பையின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் மிகச்சிறப்பாக மீண்டு வருவார் என நம்புவோம்.