இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி கார்டிப் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தோனியின் மீண்டுமொரு மின்னல் வேக ஸ்டம்பிங் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் ட்விட்டரில் ஒரு சுவாரசிய ட்வீட்பதிவிட்டிருந்தது. அதில் “தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும் பொழுது நீங்கள் கிரீசை எப்பொழுதும் தாண்டாதீர்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கு இரையானார். இந்த சம்பவத்திற்கு பிறகே ஐசிசி இந்த சுவாரஸ்ய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த எச்சரிக்கையை உண்மையாக்கும் ஒரு நிகழ்வாக இன்றைய போட்டி அமைந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் செய்ஃபர்ட் மற்றும் காலின் மன்ரோ இந்திய பந்துவீச்சை விளாசித் தள்ளி ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் 8-வது ஓவரில், இந்தத் தொடரில் முதல்முறையாக ஆடும் வாய்ப்பை பெற்ற குல்தீப் யாதவ் பந்து வீசினார். இந்த ஓவரில் வீசிய நான்காவது பந்தை செய்ஃபர்ட் தடுக்க முயல வந்து அவரை ஏமாற்றி பின்னால் நின்ற தோனி வசம் சென்றது. பந்து கையில் சிக்கிய உடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி ஸ்டெம்பை தகர்த்தார். உடனே இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட, கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.
பேட்ஸ்மேன் செய்ஃபர்ட் தான் ‘நாட் அவுட்’ என்பதில் உறுதியாக இருக்க, தோனியும் தன்னுடைய ஸ்டம்பிங் மீது முழு நம்பிக்கை வைத்து மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தார். ரீ-பிளே-வில் செய்ஃபர்டின் கால் கிரீஸின் மேலே இருப்பது போல ஒரு ஆங்கிளில் தெரிந்தது. மற்றொரு ஆங்கிளில் அவரது கால் கிரீசுக்கு உள்ளே லேசாக இருப்பது போலவும் தெரிந்தது. எனவே மூன்றாவது நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வீரர்களிடமும், ரசிகர்களிடமும் தென்பட்டது.
பல்வேறு முறை வேறு வேறு ஆங்கிள்களில் இந்த ஸ்டம்பிங்கை அலசிய 3வது நடுவர் கிறிஸ் பிரவுன் இறுதியாக ‘அவுட்’ என தீர்ப்பளித்தார். இதனால் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட டிம் செய்ஃபர்ட் சோகத்துடன் நடையை கட்டினார். இவர் 23 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சூப்பர் சிக்சர்களும் அடங்கும். இவர் முதல் டி-20 போட்டியில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றது மட்டுமல்லாது இந்த தொடரின் ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தோனி இந்த மின்னல் வேக ஸ்டம்பிங்கை செய்ய எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 0.099 வினாடி மட்டுமே. (இது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்காகும்). இந்த ஸ்டம்பிங்கை பல்வேறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தோனியை பாராட்டி பல்வேறு மீம்ஸ்களும் வைரலாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.