நேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்திற்குள் கையில் தேசிய கொடியுடன் ஓடிவந்த தோனியின் ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழுந்தார். இதற்கு தோனி என்ன செய்தார்?? என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் டி-20 தொடரின் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இந்த போட்டி நியூசிலாந்து மைதானத்தில் நடைபெற்றாலும், இந்திய அணிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். எனவே இந்திய அணிக்கு எந்தவித சிக்கல்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு செய்திருந்தது. இந்த பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் கையில் தேசிய கொடியுடன் ஓடிவந்தார்.
அவ்வாறு ஓடி வந்தவர் ஒரு கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் தோனியின் கால்களை தொட்டு வணங்கினார். அப்போது தோனி தனது கால்களுக்கு அருகில் வைத்திருந்த தேசியக்கொடியை அவரிடமிருந்து வாங்கி தனது கையில் வைத்துக்கொண்டார். தோனியின் இந்த தேச பக்தியையும், தேசிய கொடியின் மீது அவர் வைத்திருந்த மரியாதையையும், இணையதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்தப் போட்டியில் சிறப்பான ஸ்டம்பிங் ஒன்றையும் செய்தார். போட்டியின் போது நியூசிலாந்து அணியின் செய்ஃபர்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது குல்தீப் யாதவ் எட்டாவது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரில் செய்ஃபர்ட் கிரீசுக்குள் காலை வைப்பதற்குள் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்துவிட்டார் தோனி. அவர் ஸ்டம்பிங் செய்ய எடுத்துக் கொண்ட நேரம் 0.099 வினாடிகள் மட்டுமே.
இதை ஐசிசி, தனது ட்விட்டர் பக்கத்தில், "தோனி ஸ்டம்பிங் செய்ய வெறும் 0.099 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார்" எனக் குறிப்பிட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இது தோனியின் 191 ஆவது ஸ்டம்பிங் ஆகும். இறுதி ஓவர்கள் வரை விறுவிறுப்பாக சென்ற நேற்றைய போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. இறுதி ஓவரில் வெற்றி பெற 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் இந்திய அணி 6 பந்துகளில் வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம் நியூசிலாந்து அணியிடம்,டி-20 தொடரையும் இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இந்த டி20 தொடரின், தொடர் ஆட்டநாயகன் விருது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட்- க்கு வழங்கப்பட்டது.