குறுகிய கால போட்டிகளில் ஆட்டத்தை மிக வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் வீரர்களில் முதன்மை வகிக்கிறார், இந்தியாவின் மகேந்திர சிங் தோனி. கடந்த பல வருடங்களாகவே இவர் இந்த பணியை அற்புதமாக செய்து வருகிறார். தமக்கு வயது ஆக ஆக மென்மேலும் பேட்டிங்கில் தம்மை மெருகேற்றி வருகிறார், தோனி. 2 ஆண்டுகள் தடை பின்னர், கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடியது. இருப்பினும், தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு தோனி முக்கிய பங்காற்றினார். எனவே, ஐபிஎல் போட்டிகளில் இவரின் 3 சிறந்த ஃபினிஷிங் ஆட்டங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#3.புனே Vs பஞ்சாப்:
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் புனே மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படும் என்ற நிலை இருந்தது. 173 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி, 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. 14-வது ஓவரில் தோனி ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா உடன் பார்ட்னர்ஷிப் போட்டார். 6 ஓவர்களில் 87 ரன்கள் புனே அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. இருவரும் இணைந்து சிறப்பாக இன்னிங்சை கட்டமைத்தனர். ஆட்டத்தின் இறுதி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சார் படேல் அந்த ஓவரை வீச வந்தார். தோனி களத்தில் நின்று முதல் பந்தை டாட் பால் ஆக்கினார். அடுத்து வந்த இரு பந்துகளை சிக்சரும் பவுண்டரிகளுமாய் மாற்றினார். கடைசி இரு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டன. அந்த இரண்டு பந்துகளையும் தோனி சந்தித்து 2 சிக்சர்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். டி20 போட்டிகளில் இது போன்ற ஆட்டம் நிகழ்வது சகஜம் என்றாலும் இறுதி ஓவரில் 23 ரன்களை குவிக்கும் திறம் படைத்த வீரர்கள் வெகு குறைவு தான்.
#2.சென்னை Vs பஞ்சாப்:
2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற சென்னை அணிக்கு 191 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டத்தின் கடைசி 20 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தோனி ஆல்ரவுண்டர் ஆல்பி மார்கல் உடன் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்ல களம் புகுந்தார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்து வீச வந்தார், இர்ஃபான் பதான். தோனி இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இர்பான் பதானின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஒரு பவுண்டரி, இரு ரன்கள் மற்றும் இரு சிக்ஸர்கள் என தொடர்ச்சியாக குவித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இவரின் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று.
#1.சென்னை சூப்பர் கிங்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல்முறையாக சன்ரைசர்ஸ் அணி விளையாடியது. அந்த தொடரில் சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டன. அந்தத் தொடரில் தோனி சிறப்பாக எந்த போட்டிகளிலும் ஜொலிக்கவில்லை. இருப்பினும், இந்த இன்னிங்சில் அனுபவமில்லாத ஆசிஸ் ரெட்டி இறுதி ஓவரை வீச வந்தார். இதனை தனக்கேற்றபடி மாற்றினார் தோனி. ஆசிஸ் ரெட்டி வீசிய மித வேக பந்துவீச்சில் பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார், தோனி. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது ஆட்ட முடிவில் தோனி 37 பந்துகளில் 67 ரன்களை குவித்தார்.