ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ அணியை மிக எளிதாக வீழ்த்தி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
இந்த சீசனில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு இந்த போட்டி லீக் போட்டியில் கடைசி உள்ளூர் ஆட்டமாக அமைந்தது. இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் 7 ஆட்டங்களில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று ‘மும்பை இந்தியன்ஸ்’ அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதலில் மந்தமாக ஆட்டத்தை தொடங்கிய சென்னை அணிக்கு, கேப்டன் தோனி களம் இறங்கிய பிறகு ரன்கள் மளமளவென வரத் தொடங்கின. முந்தைய ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத தோனி நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் பட்டையைக் கிளப்பினார்.
4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் தல தோனி. மேலும் ‘டிரெண்ட் போல்ட்’ வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை தனது ‘டிரேட் மார்க்’ ஸ்டைலில் சிக்ஸருக்கு தூக்கி அசத்தினார் தோனி.
பின்னர் 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி சென்னை அணியின் அபார பந்துவீச்சில் 99 ரன்களுக்கு சுருண்டு 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. சென்னை அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ‘இம்ரான் தாஹிர்’ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
வெற்றிக்குப் பிறகு கேப்டன் தோனி அளித்த பேட்டியில், “சென்னை ரசிகர்கள் என்னை எப்போதும் பெயரை சொல்லி அழைக்காமல் ‘தல’ என சொல்லியே அழைக்கிறார்கள். இது அவர்கள் எனக்கு கொடுத்த மிகப்பெரிய செல்லப் பெயர். இதுபோன்ற செல்ல பெயர் எடுப்பது உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷலான ஒரு விஷயம் தான். சென்னை ரசிகர்கள் என்னை மட்டும் ஆதரிக்காமல் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் ஆதரிக்கிறார்கள்”. இவ்வாறு தோனி கூற ரசிகர்கள் ஆரவாரத்தில் சேப்பாக்கம் அதிர்ந்தது.
அடுத்ததாக தோனியின் விரைவான ‘ஸ்டம்பிங் திறன்’ குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் கூறுகையில், “எனக்கு தெரிந்து இது டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இருந்து வந்திருக்கும் என நான் நினைக்கிறேன். விக்கெட் கீப்பிங் பணிக்கு அடிப்படையான விஷயங்களை செய்வது எப்பொழுதும் முக்கியமாகும்”.
“விக்கெட் கீப்பிங் பணி எப்பொழுதும் கடினமானது. தவறுகள் அதிகமாக நடக்கக் கூடியது. எனினும் நீங்கள் அடிப்படையான விஷயங்களை சரியாக செய்தால் கீப்பிங்கில் அடுத்த கட்டத்துக்கு செல்லலாம்”. இவ்வாறு தோனி கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணியை மொஹாலியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது. தற்போது 18 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதலிடத்தை உறுதி செய்துவிடலாம்.
ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்களில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.