இந்தியாவின் சீனியர் பிளேயராக இருக்கும் தோனி சச்சினுக்கு அடுத்தபடியாக இந்திய ரசிகர்களால் பெரிதும் கவரப்படும் கிரிக்கெட் வீரர். அதுவும் தமிழ்நாட்டில் சொல்லவே தேவையில்லை மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்துள்ளார்.
பேட்டிங் ஆனாலும் சரி, கீப்பிங் ஆனாலும் சரி, தோனி களத்துக்கு வந்தால் போதும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் சொந்த மண்ணில் ஆடாத போதிலும் சென்ற இடமெல்லாம் தன் வசப்படுத்தியது : காரணம் தோனி, அவர் எங்குச் சென்றாலும் அவருக்கென ரசிகர்கள் திரண்டனர்."தோனி தோனி தோனி" என்ற கரகோஷம் எங்குப் போனாலும் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஐபிஎல்-இல் வேற்று அணி ரசிகர்கள் பலர் தோனி ஆடும்போது மட்டும் சிஎஸ்கே ரசிகர்களாக மாறிவிடுவார்கள்.
தோனியின் ஆட்டத்தைப் சிலர் வெறுத்தாலும் அவரது தன்னடக்கத்தை யாரும் வெறுக்க மாட்டார்கள். தோனி பல வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மேலும் பல இளம் வீரர்களுக்குத் தோனி தான் ஆசான்.
நடந்தது என்ன?
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒன் டே போட்டிகளுக்கு பிறகு தோனி ஓய்வில் உள்ளார், பெரும்பாலும் ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் தான் ஓய்வெடுப்பார். ஓய்வில் செல்லப் பிராணிகளுடன் வலம்வருவது அவரது வழக்கம். தோனி பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை.
கேப்டன் கூல் தோனி காரில் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த நிலையில் அருகே ஒரு சிறுவன் தன்னை உற்று நோக்குவதை அறிந்தார் தோனி. நினைத்திருந்தால் ரசிகர்கள் கூடுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டிருக்கலாம், அவ்வாறு செய்யாமல் அச்சிறுவனை அழைத்து சிறிது நேரம் உரையாடினார். அந்தச் சிறுவனோ கதிகலங்கி என்ன பேசுவது என்று தெரியாமல் தோனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
தோனி சில வாழ்வியல் அறிவுரைகளைக் கூறியிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து. இறுதியில் தோனி அச்சிறுவனிடம் கைகுலுக்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நிச்சயமாக மறக்க முடியாத தருணமாக இச்சம்பவம் அச்சிறுவனுக்கு அமைந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்த வீடியோ ஏதோ ஒரு விமான நிலையத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.
தோனியின் எதிர்காலம் ?
தோனி ஐபிஎல்-இல் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும் சர்வதேச போட்டிகளில் சற்று மந்தமாகவே தென்படுகிறார். உண்மையை சொல்லப்போனால் தோனிக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தன. கிடைத்த வாய்ப்புகளையும் தோனி பயன்படுத்திக் கொள்ளவில்லை அதன் விளைவாகவே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் தோனி நீக்கப்பட்டார். ரிஷப் பான்டிற்கு உலககோப்பை முன்பாகப் போதிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தோனி நீக்கப்பட்டதாகத் தேர்வுக்குழுத் தலைவர் எம் எஸ் கே பிரசாத் தெரிவித்திருந்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா டி20 அணியிலும் தோனி இடம்பெறவில்லை. இதற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் சில பேர் தோனியின் ஃபார்மை கருத்தில் கொண்டு இந்த முடிவு சரியானதெனக் கூறுகின்றனர்.
எனினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன் டே அணியில் தோனி இடம்பெற்றிருப்பது அவர்களின் ரசிகர்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தோனி மீண்டும் பழைய தோனியாக மாறமாட்டாரா என்று பல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தலைவர் பாணியில் சொன்னால் “இதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்”