2019 உலககோப்பை தொடர் வரும் மே 30 முதல் துவங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கான தங்களது 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அம்பத்தியு ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இடம் பெறாததை ரசிகர்கள் பெருமளவில் விமர்சித்தனர். அதிலும் தினேஷ் கார்த்திக்-க்குப் பதிலாக ரிஷப் பண்ட்-யை தேர்வு செய்த்திருக்கலாம் என பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு மத்தியில் தினேஷ் கார்த்திக் எவ்வளவு வலிகளை கடந்து இந்த உலககோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார் என்பதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் அறிமுகமாகிவிட்டார். விக்கெட் கீப்பராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை துவங்கினார் இவர். ஆனால் துர்தஷ்டவசமாக மகேந்திர சிங் தோணியிடம் தனது விக்கெட் கீப்பர் இடத்தினை இழந்தார். இருந்தாலும் அதன்பின் துவலாமல் பேட்ஸ்மேனாகவே உருவெடுத்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். அப்போது தான் 2007 உலககோப்பை நெருங்கியது. உலககோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார் தினேஷ் கார்த்திக். ஆனாலும் அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு ஒருமுறை கூட கிடைக்கவில்லை. இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்திய அணி அந்த தொடரில் படுமோசமாக லீக் சுற்றிலேயே வெளியேறியது.
அதன் பின்னர் அதே ஆண்டில் டி20 உலககோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அணியிலும் இடம் பிடித்தார் தினேஷ் கார்த்திக். ஆனால் இந்தமுறை அணியில் களமிறக்கப்பட்டார் இவர். அந்த தொடரில் பெரம்பாலான போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடினார். இந்திய அணியும் அந்த முறை கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
அதன் பிறகு இந்திய அணியில் அவ்வபோது தோணி விளையாடாதபோது மட்டுமே தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தனர். 2011 உலககோப்பை அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணியின் முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தேர்வு செர்யப்பட்டார். அந்த தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இரண்டு சதங்களை அடுத்தடுத்து விளாசி தனது இடத்தினை 100% உறுதி செய்தார் தினேஷ் கார்த்திக். அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணியில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஒற்றையாளாக நின்று 160 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த அந்த போட்டியை இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாது. அந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி இந்திய அணி கேப்பையை வெல்வதற்கு காரணமாய் அமைந்தார் இவர்.
2015 உலககோப்பை தொடரிலும் இவர் தேர்வு செய்யப்படவில்லை. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேர்வு செய்யப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இறுதியில் மனீஷ் பாண்டே காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார் தினேஷ் கார்த்திக். அந்த தொடரின் பயிற்சி ஆட்டத்திலும் வங்கதேச பந்துவீச்சாளர்களை பதம் பார்த்து 97 ரன்கள் குவித்தார். ஆனாலும் அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இந்திய அணி அதில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்தது.
அதற்கடுத்து தான் தினேஷ் கார்த்திக் ஒருநாள் போட்டிகளில் களமிறக்கப்பட்டார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை என அனைத்து அணிகளுக்கு எதிரான தொடரிலும் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். இருந்த போதும் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் இவருக்கு உலககோப்பை அணியில் இடமில்லை என அனைவராலும் கூறப்பட்டது. அந்த தொடரில் ரிஷப் பண்ட்-ன் பொறுப்பற்ற ஆட்டத்தினை கண்ட தேர்வுக்குழு தற்போது மீண்டும் தினேஷ் கார்த்திகை அணியில் சேர்த்துள்ளது. இந்த உலககோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்-ன் அனுபவம் அணிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.