தற்போது உலககோப்பை தொடர் அடுத்த வாரம் துவங்க உள்ள நிலையில் அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்து சென்றுள்ளன. உலககோப்பை-யில் பங்கேற்கபோகும் இந்திய அணியின் சீனியர் வீரர்களுள் ஒருவர் தான் தினேஷ் கார்த்திக். அவர் 2007 உலககோப்பை, 2013 & 2017 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் தற்போதைய உலககோப்பை தொடர் என முக்கிய ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ளார். ஐசிசி தொடர் நாயகன் என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் ஷிகர் தவான் தான். அதுபோல ஐசிசி தொடர்களின் பயிற்சி ஆட்ட நாயகன் தினேஷ் கார்த்திக் தான். அவர் எவ்வாறு பயிற்சி போட்டி நாயகன் ஆனார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
ஐசிசி உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர்களில் பயிற்சி போட்டிகள் நடத்துவது வழக்கம். அதில் ஒரு அணிக்கு குறைந்தது இரண்டு ஆட்டங்களாவது விளையாடும். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடருக்கான அணியில் தினேஷ் காரத்திக் சேர்க்கப்பட்டார். அப்போது நடைபெற்ற முதலாவது பயிற்சி போட்டியில் இந்திய அணி முதலாவது போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 300 ரன்கள் குவித்தது. ஆனால் தினேஷ் கார்த்திக் வெறும் 3 ரன்கள் மட்டுமே இந்த போட்டியில் குவித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரர் இவர் தான்.
அதன் பின்னர் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நான்காவது இடத்தில் களமிறங்கும் வீரராக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்தார். அந்த தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 333 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி சார்பில் ஆறாவது வீரராக களமிறக்கப்பட்ட தினேஷ் கார்த்திக் சதம் விளாசி இந்தியாவை 49 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார். பின் இரண்டாவது பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோத அதில் களமிறங்கிய அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது தினேஷ் கார்த்திக் கேப்டன் தோணியுடன் சேரந்து அதிரடியாக ஆட துவங்கினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த அவர் 146* ரன்கள் குவித்து அசத்தினார். இவரின் இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணி எளிதில் ஆஸ்திரேலியாவை வென்றது.
2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபியில் காயம் காரணமாக மனீஷ் பாண்டே இடம் பெறாததால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் காரத்திக் நியூசிலாந்து அணிக்கெதிராக ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கெதிராக 97* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் ரிடையர்டு ஆனார். மேலும் அதே போட்டியில் மூன்று கேட்ச்களும் பிடித்து அசத்தினார் அவர்.
இதுவரை அவர் விளையாடியுள்ள போட்டிகளின் ரன்கள் விவரம்:
2007 உலககோப்பை : 3, 38*
2013 சாம்பியன்ஸ் ட்ராபி : 106*, 146*
2017 சாம்பியன்ஸ் ட்ராபி : 0, 97*
இதுவரை அவர் களமிறங்கியுள்ள ஆறு போட்டிகளில் வெறும் இரண்டு முறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கணக்கையெல்லாம் வைத்து பார்க்கும் போது உங்களுக்கே தெரிய வரும் தினேஷ் கார்த்திக் தான் ஐசிசி தொடர் பயிற்சி போட்டியின் நாயகன் என்று.