தமிழகத்திலிருந்து இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒரு சிலரே. அதிலும் நம் மனதில் பதிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தெரியப்பட்ட வீரர் தினேஷ் கார்த்திக். இவர் கடைசியாக விளையாடியது உலககோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் தான். அதில் இந்திய அணியின் நம்பிக்கை தூண்களான விராத்கோலி, ரோகித் ஷர்மா என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒரு ரன்னில் வெளியேற களத்தில் நுழைந்த தினேஷ் கார்த்திக் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தனது பேட்டிங்கை துவங்கினார். ஆனால் துர்தஷ்டவசமாக நீஷம் பிடித்த அசாத்திய கேட்ச்-ன் மூலம் இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வந்தது என அனைவராலும் நம்பப்படுகிறது. அதேபோல தற்போது நடந்து வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இவரை அணியில் சேர்க்கவில்லை நிர்வாகம். இந்நிலையில் இவர் கூடிய விரைவில் தனது ஓய்வினை அறிவிப்பார் என்ற வதந்திகளும் இணையத்தில் பரவின. இதற்கு முடிவுகட்டும் விதமான தமிழக கிரிக்கெட் வாரியம் இவருக்கு புதிய வாய்ப்பினை வழங்கியுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
தினேஷ் கார்த்திக் 2017 ஆம் ஆண்டு நடந்த விஜய் ஹசாரே ட்ராபி-ல் அதிக ரன்களை குவித்து தமிழக அணிக்கு கோப்பையைக் கைப்பற்றி தந்தார். அதுமட்டுமின்றி அதன் பின் நடந்து முடிந்த தியோதர் ட்ராபி தொடரிலும் தமிழக அணியை சாம்பியனாக்கினார். இதன் மூலம் இவருக்கு 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலிருந்து 2019 உலககோப்பை வரை இந்திய அணியின் ஒரு அங்கமாகவே விளங்கி வந்தார் இவர். ஆனால் தற்போதைய நிலையில் இவரால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு நடைபெற விருக்கும் விஜய் ஹசாரே தொடரில் இவரை தமிழக அணிக்கு கேப்டனாக நியமித்துள்ளது. இந்த தொடரில் வழக்கம் போல இவர் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இவர் மீண்டும் நுழைய வேண்டும் என்ற நோக்கத்துடனே இந்த முடிவை தமிழக கிரிக்கெட் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தமிழக தேர்வுக்குழு தலைவர் செந்தில் நாதன் தெரிவிக்கையில், " தற்போதைய தமிழக அணியில் சிறந்த கேப்டனாகவும், அனுபமிக்க வீரராகவும் கருதப்படுகிறார் தினேஷ் கார்த்திக். இவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வருவதால் இது அவருக்கு சுலபமான வேலையாகவே இருக்கும் என கருதுகிறோம். இம்முறை இவர் தலைமையில் தமிழக அணி கோப்பையைக் கைப்பற்றும்" எனவும் தெரிவித்தார்.
இந்த விஜய் ஹசாரே தொடரானது வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியானது ஜெய்பூரில் துவங்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளவிருக்கும் மற்ற வீரர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக் தமிழக அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.