12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி ஆரம்பமாகி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று பெங்களூரில் நடந்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. காயம் காரணமாக கடைசியாக நடந்த போட்டிகளில் விளையாடாத தோனி மற்றும் டி வில்லியர்ஸ் அவரவர் அணிகளுக்கு திரும்பினர். முதலில் பேட் செய்த பெங்களூர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கோலி தீபக் சாஹார் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் வந்த டி வில்லியர்ஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பார்த்தீவ் படேல் ரன்களை குவித்த வண்ணம் இருந்தார். அக்ஷ்தீப் நாத் 24 ரன்களில் அவுட்டானார். பார்த்தீவ் படேல் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ்(13), மொயீன் அலி (26) ஆகியோரின் பங்களிப்பால் பெங்களூர் அணி 161 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு முதல் ஓவரிலேயே ஸ்டெயின் செக் வைத்தார். அவர் ஷேன் வாட்சன், ரெய்னா ஆகியோரை முதல் ஓவரிலேயே வெளியேற்றினார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் டு பிளசிஸ் கேதர் ஜாதவ் ஆகியோரை வெளியேற்றி உமேஷ் யாதவ் சென்னை அணியை நிலைகுலைய வைத்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனியும் ராயுடுவும் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ராயுடு நிதானமாக ஆட மறுபக்கம் தோனி அடித்து ஆடினார். ராயுடு 29 ரன்கள் எடுத்து சாஹலின் பந்துவீச்சில் அவுட்டானார். பெங்களூர் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதனால் ரன்கள் எடுக்க சென்னை அணி சிரமப்பட்டது. ரவீந்திர ஜடேஜா 11 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் வந்த பிராவோவும் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரை சந்தித்த தோனி முதல் ஐந்து பந்தில் 24 ரன்கள் எடுத்து மலைக்க வைத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது பந்தை தொட முடியாததால் பைஸ் ஓட முயற்ச்சித்தார். ஆனால் தாகூர் பார்த்தீவ் படேலால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் பெங்களூர் அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் தோல்விக்கான காரணத்தை விளக்கினார். அவர் கூறியதாவது:
"எங்களது அணி வலுவான பேட்டிங் ஆர்டரைக் கொண்டிருக்கிறது. திறமையான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால், குறிப்பிடத்தக்க பாட்னர்ஷிப்புகளை அமைக்க அவர்கள் தவறுகிறார்கள். தோனி மற்றும் ராயுடு ஆகியோரை மட்டுமே அதிகம் சார்ந்திருந்தால் ஐபிஎல் தொடரை எங்களால் வெல்ல முடியாது. நாங்கள் கொஞ்சம் பொறுபற்ற முறையில் விளையாடினோம். இந்த போட்டியின் போது விவேகமாக செயல்படாமல் பொறுபற்ற முறையில் செயல்பட்டோம். நாங்கள் இழந்த பார்மை மீட்க முயன்று வருகிறோம். நாங்கள் 7 வெற்றிகளை பெற்றுள்ளோம். அந்த வெற்றிகளை பெற்ற விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை ஆனால் அந்த வெற்றிகள் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. வரும் போட்டிகளில் எங்கள் டாப் ஆர்டர் வீரர்கள் இழந்த பார்மை மீட்பார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "தோனி எப்போதும் தெளிவான திட்டமிடலுடன் இருப்பவர். கடைசி ஓவர்கள் குறித்து அவரிடம் எப்போதுமே நான் கேள்வி எழுப்பியதில்லை. பிராவோவுக்கு அந்தத் திறன் இருந்தும் இப்படித்தான் போட்டியை முடிக்க வேண்டும் என தோனி விரும்பினால் நான் எப்போதும் தோனியின் முடிவுக்கே பக்கபலமாக இருப்பேன் . அவர் இதை பலமுறை செய்திருக்கிறார். இன்றைய (நேற்றைய) போட்டியிலும் கூட வெற்றிக்கு மிக அருகில் எங்கள் அணி வந்துவிட்டது. அதனால் நான் எப்போதும் அதுகுறித்து கேள்வி எழுப்புவதில்லை. தோனி களத்தில் எடுக்கும் முடிவுகள் குறிப்பாக கடைசி ஓவர்களில் எடுக்கும் முடிவுகள் குறித்து நான் என்றுமே கேள்வி எழுப்பியதில்லை. ஏனென்றால், தன்னால் சிக்சர்கள் விளாச முடியும் என்ற நம்பிக்கை தோனிக்கு இருப்பதுதான் காரணம் . தனது செயல்பாடுகளை மையமாக வைத்து கடைசி ஓவர்கள் குறித்து அவர் திட்டமிடும் முறை அப்படிபட்டவை" என்றார்.