விராட் கோலியிடம் வார்த்தைகளை விடாதீர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு டூப்பிளெஸ்ஸிஸ் அறிவுரை

South Africa captain
South Africa captain

இந்திய அணி எந்த அணியுடன் ஆடினாலும் அவ்வணிகளின் முதல் குறிக்கோள் இந்திய கேப்டனான விராட் கோலியை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவுட் ஆக்குவது தான். ஏனெனில் கோலி எளிதில் தன் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி எதிரணியிடமிருந்து வெற்றியே பறித்துச் செல்வார்.

ஆஸ்திரேலியா அணி ஸ்லெட்ஜிங் எனப்படும் எதிரணி வீரர்களைக் கிண்டலடிக்கும் முறையைத் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆஸ்திரேலியா வீரர்களாலும் ரசிகர்களாலும் ஸ்லெட்ஜ் செய்யப்படுவது வாடிக்கையாகும். வேற்று அணி வீரர்களையும் இந்த ஸ்லேட்ஜிங் விட்டுவைப்பதில்லை, இருந்தபோதும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் இது அதிகமாக நடந்தேறும்.

பல வீரர்கள் ஸ்லேட்ஜிங்கினால் மன அளவில் பாதிக்கப்பட்டு தனது ஆட்டத்தை இழந்திருக்கின்றனர்.பல சமயங்களில் வார்த்தைகள் முட்டிமோதிப் பெரும் சண்டைக்கு வித்திடுகிறது. ஆகவே ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு பிளேயர் நன்கு விளையாட வேண்டும் என்றால் அவரின் ஆட்டத்திறன் மட்டும் போதாது அவர் ஒரு நல்ல மன நிலையிலும் இருப்பது அவசியம், அதன் மூலமாகவே தகாத வார்த்தைகளைப் புறந்தள்ளி ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வெற்றியைக் கண்டறிய முடியும்.

தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கால் பதித்துள்ள நிலையில் அடுத்தகட்ட போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்க கேப்டனான டூப்பிளெஸ்ஸிஸ் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு விராட் கோலியை சீண்டாமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது இந்திய அணி பல மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றபோது நாங்கள் கோலியிடம் சீண்டவில்லை மாறாக அவரிடம் அமைதியாக இருந்தோம்.ஆதலாலேயே எங்களால் அவரை (ஒரு மேட்ச் தவிர) பெரிதும் ரன் எடுக்கவிடாமல் கட்டுக்குள் வைக்க முடிந்தது. உலக கிரிக்கெட்டில் சில வீரர்கள் இது போன்ற உள்ளார்கள் அவர்களைச் சீண்டினால் இரண்டு மடங்கு பர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்துவர். அதில் கோலியும் ஒருவர் என டூப்பிளெஸ்ஸிஸ் தெரிவித்திருக்கிறார்.

போன இங்கிலாந்து சீரிசில் அவ்வணி வீரர்கள் மோதல் போக்கு கட்டியதனாலேயே விராட் கோலியால் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அவர் களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும் ரன் பசியோடு இருந்ததை நம்மால் காண முடிந்தது, அதன் விளைவாகவே இந்தத் தொடரில் 500-கும் மேற்பட்ட ரன்களை அவரால் அடிக்க முடிந்தது.

வரப்போகும் ஆஸ்திரேலிய தொடரில் மோதல் போக்கு சற்று குறைந்தே காணப்படும் ஏனெனில் ஸ்மித் வார்னரின் இல்லாமை. தொடர் தோல்விகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி சற்று அடக்கியே வாசிக்கும் எனத் தெரிகிறது.

ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் கம்பீர நடை போட்டாலும் பேட்டிங்கில் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. அதேபோல் இந்திய அணியும் சமீபகாலமாகப் பந்துவீச்சில் கலக்கி வருகிறது, பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினால் அசைக்க முடியாத அணியாக இந்தியா இத்தொடரில் பலம் பெறும். கடந்த ஆஸ்திரேலியா தொடரில் முரளி விஜய் நன்றாக ஆடிருந்த நிலையில் இந்தத் தொடரில் சிறந்து விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறியது போல் ஆஸ்திரேலிய அணியின் தொய்வை பயன்படுத்தி இந்திய அணி நன்றாக ஆடினால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றும் கனவு வெகுதூரமில்லை.

Edited by Fambeat Tamil