இந்திய ஜாம்பவானான ராகுல் டிராவிட் இன்று தனது 47வது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். அணியில் எந்த இடத்திலும் விளையாடக்கூடிய தன்மை பெற்றவர், இவர் தொடக்க வீரராகவும் நம்பர் 3 வீரராகவும் விளையாடி உள்ளார். அணிக்காக பல வழியில் உதவக்கூடிய இவர் முழுநேர விக்கெட் கீப்பர் இல்லை எனினும் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.
இதன்மூலம் இந்திய அணி மேலும் ஒரு பேட்ஸ்மேனை கொண்டு வலுப்பெற்றது. இந்திய அணிக்காக பல வழிகளில் உதவிய இவர், தன்னடக்கம் மற்றும் அமைதி போன்ற பண்புகளின் மூலம் பல ரசிகர்களை பெற்றார், பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார்.
இவர் தற்போது இந்தியா ஏ அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார், இவரை "தி வால்"(சுவர்) என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறது.
டிராவிட் பல சாதனைகளை செய்து இருந்தாலும் இவரது ஒரு சில சாதனைகள் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவ்வகையான சில சாதனைகளைப் பற்றி இவற்றில் பார்க்கலாம்.
#1 டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த ஜோடி:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஜோடிகளில் சச்சின் மற்றும் டிராவிட் ஜோடி ஒன்றாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஜோடி 6920 ரன்கள் சேர்த்துள்ளனர், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு ஜோடிக்கும் இதுவே அதிகமாகும். சராசரி 50.51 ஆகும்.
டிராவிட் - சச்சின் 20 முறை 100 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர், இது எந்த ஒரு ஜோடிக்கும் அதிகமாகும். இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமாகும். ஏனெனில் தற்போது விளையாடி வரும் எந்த ஒரு ஜோடியும் இந்த சாதனைக்கு அருகில் இல்லை.
தற்போதுள்ள ஜோடிகளில் வில்லியம்சன் மற்றும் டெய்லர் 2926 அதிக ரன்கள் சேர்த்துள்ளார்கள், இதுவே அதிகமாகும். இந்த சாதனையை முறியடிக்க குறைந்தது 10 வருடங்கள் ஆகலாம், அதுவரை இச்சாதனை பாதுகாப்பாகவே இருக்கும் எனலாம்.
#2 அதிக கேட்ச்கள்:
கிரிக்கெட் விளையாட்டில் எப்பொழுதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சே ரசிகர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கிறது. போட்டிகளின் பின்பும்கூட பேட்ஸ்மேன்கள் அல்லது பந்துவீச்சாளர்களுக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்படுகிறது, பில்டிங் பெரிதாக கண்டுகொள்ளப்படுவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். இருப்பினும், டிராவிட் ஸ்லிப் பகுதிகளில் நன்றாக பில்டிங் செய்யும் திறமை உடையவர், இவரின் பில்டிங் திறமையின் மூலம் இந்திய அணி பெரிதும் பயனடைந்து குறிப்பாக வெளிநாடுகளில்.
விக்கெட் கீப்பராக இல்லாமல் பில்டராக அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் வரிசையில் டிராவிட் முதலிடத்தில் 210 கேட்ச்களை கொண்டு முதலிடத்தில் உள்ளார். குறிப்பிட்ட பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள் வரிசையில் டிராவிட் 2ஆம் இடத்தில் உள்ளார், இவர் கும்ப்ளே பந்துவீச்சில் 55 கேட்ச்கள் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக கேட்ச்கள் பிடித்த வீரர்கள்:
210 - டிராவிட்
205 - ஜெயவர்த்தனே
200 - காளிஸ்
196 - பாண்டிங்
181 - மார்க் வாக்
#3 டிராவிட்டின் 300+ ரன்கள் கூட்டணி:
ஒருநாள் போட்டி வரலாற்றில் 300 ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் ஜோடி டிராவிட் மற்றும் கங்குலி ஜோடியாகும்.1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தனர். அப்போட்டியில் 183 ரன்கள் அடித்த கங்குலிக்கு அதுவே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். அதே வருடத்தில் டிராவிட் மற்றும் சச்சின் 300 ரன்களுக்கு மேல் சேர்த்தார்கள். இன்றுவரை உலகளவில் ஒருநாள் போட்டியில் டிராவிட் மட்டுமே 2 300+ ரன்கள் கூட்டணியில் பங்களித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியின் வரலாற்றில் 300+ ரன்கள் கூட்டணி சேர்த்த இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டிராவிட் நான்கு முறை பங்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் இரண்டு முறை லட்சுமணனுடனும் சேவாக் மற்றும் காம்பிருடன் தலா ஒரு முறையும் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் முக்கியமாக 2001ஆம் ஆண்டு ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டிராவிட் மற்றும் லட்சுமண் கூட்டணி இந்திய ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மறக்க முடியாத ஒன்றாகும்.
உலக வரலாற்றில் அதிக ரன்கள் சேர்த்த கூட்டணி:
372 - கெயில்/சாமுவேல்ஸ்
331 - டிராவிட்/சச்சின்
318 - டிராவிட்/கங்குலி
304 - ஃபக்கார்/இமாம்