ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்திவரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்று இலங்கை அணி சாம்பியன் ஆனது.
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கடந்த 10 நாட்களாக இலங்கை நாட்டின் கொழும்பு நகரிலும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரிலும் நடைபெற்றது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. 8 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.
குரூப் ஏ வில் இந்திய U23 அணி, இலங்கை U23, ஆப்கானிஸ்தான் U23 அணி மற்றும் ஓமன் நாட்டு அணிகள் இடம் பெற்றன. குரூப் ஏ போட்டிகள் அனைத்தும் கொழும்பு நகரில் நடைபெற்றது.
குரூப் பி இல் பாகிஸ்தான் U23, வங்கதேசம் U23 , ஹாங் காங் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இடம் பெற்றன. குரூப் பி போட்டிகள் அனைத்தும் கராச்சி நகரில் நடைபெற்றது.
குரூப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும் இதில் முதல் இரு இடம் பிடித்த அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
ஜெயந்த் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் நிதீஷ் ராணா ,சிவம் மாவி, தீபக் ஹூடா ,அங்கீட் ராஜ்புத், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் இடம் பெற்றனர்.
குரூப் ஏ வில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வென்று இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.போட்டியை நடத்திய நாடான இலங்கை அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
குரூப் பி இல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.
கொழும்பு நகரில் நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எளிதில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி 44.4 ஓவர்களில் 172 ரன்கள் கொடுத்து பாகிஸ்தான் அணியை சுருட்டியது. மயான்க் மார்கன்டே 4 விக்கெட்களை கைப்பற்றினார். பின்னர் ஆடிய இந்திய அணி 28 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து இலக்கை அடைந்தது. நிதிஷ் ராணா 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக ஹிம்மட் சிங் 59 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை வென்று இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி கொழும்பு நகரில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 270 ரன்கள் குவித்தது. இரண்டு கைகளிலும் பந்து வீசக்கூடிய காமிடு மெண்டிஸ் அதிகபட்சமாக 61 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அங்கீட் ராஜ்புத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவதாக ஆடிய இந்திய அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ஜெயந்த் யாதவ் அதிகபட்சமாக 71 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் வெறும் 16 ரன்கள் மட்டும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை இலங்கை வீரர் காமிடு மெண்டிஸ் வென்றார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இலங்கை அணி வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.