உலககோப்பை தொடரானது தற்போது இறுதி லீக் போட்டிகளை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டிகளை தற்போது விளையாடி வருகின்றன. இந்த வாரத்துடன் முடிவடையும் லீக் போட்டிகளை தொடர்ந்து அடுத்த வாரத்துடன் உலககோப்பை தொடரும் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நோக்கில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சீஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி ஜேசன் ராய் மற்றும் ஜன்னி போர்ஸ்டோ துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் டி20 போட்டியில் விளையாடுவது போல அதிரடியான துவக்கத்தை தந்தனர். ராய் சற்று நிதானமாக ஆடினாலும் மறுமுனையில் பேர்ஸ்டோ வெளுத்து வாங்கினார். நியூசிலாந்து அணி இவர்களின் விக்கெட்டை எடுப்பதற்காக ஆறு பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தது. ஆனால் எதுவும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அணியின் ஸ்கோர் 123 ஆக இருக்கும் போது ராய் 60 ரன்கள் எடுத்த நிலையில் நேசம் வீசிய பந்தில் சாட்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரூட் பேர்ஸ்டோ உடன் இணைந்தார். ரூட் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோ இந்த உலககோப்பை தொடரில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார். அப்போது ரூட் போல்ட் வீசிய பந்தில் 24 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே பேர்ஸ்டோவும் 106 ரன்களில் ஹென்றி பந்தில் போல்ட் ஆனார்.
பின்னர் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பட்லர் கேப்டன் மோர்கனுடன் இணைந்தார். இந்த ஜோடியானது நீடிக்கவில்லை. பட்லர் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதனைத் தொடர்ந்து வந்த ஸ்டோக்ஸ் களமிறங்கிய சில நிமிடங்களிலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆனால் அணியின் கேப்டனான மோர்கன் மட்டும் நிலைத்து ஆடி ரன்களை குவித்து வந்தார். மறுமுனையில் வோக்ஸ், அடில் ரஷீத் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். மோர்கனும் 42 ரன்களில் ஹென்றி வீசிய பந்தில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 305 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக நேசம், போல்ட் மற்றும் ஹென்றி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சிறப்பான துவக்கம் கிடைத்த அந்த அணியால் அதனை பயன்படுத்தி கொள்ள முடியாமல் போனது. முதல் 120 ரன்கள் வரை விக்கெட் எதுவும் இழக்காத அந்த அணி கடைசி 180 ரன்களுக்கு மட்டும் 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனாலே 350க்கு மேல் வரவேண்டிய ஸ்கோர் 305 ஆக குறைந்தது.
306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் நிக்கோலஸ் மற்றும் கப்தில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கிய முதல் ஓவரிலேயே நிக்கோலஸ் வோக்ஸ் வீசிய பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். கப்திலும் 8 ரன்களுக்கு ஆர்சர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். துவக்கமே மோசமான நிலையில் அமைந்தது நியூசிலாந்து அணிக்கு அதனால் அணியின் பொறுப்பு முழுவதும் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரின் மீது திணிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். கிட்டத்தட்ட இந்த ஜோடி இணைந்து பத்து ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடத்தியது. ஆனால் இந்த இருவரும் துர்தஷ்டவசமாக அடுத்தடுத்து 27 மற்றும் 28 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகினர்.
இவர்களது விக்கெட்டினால் ஆட்டம் முழுவதும் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. இருந்தாலும் அடுத்து களமிறங்கிய லாதம் நிலைத்து ஆடி இங்கிலாந்து அணியை பதற வைத்தார். இவருக்கு துணையாக எந்த வீரரும் நிலையாக ஆடவில்லை. அனைவரும் சொற்ப ரன்களில் வேளியேறினர். இருந்தாலும் இவர் சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்தார். இறுதியில் 57 ரன்களில் இவரும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 45 ஓவர்களுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி போட்டியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக வுட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். சதம் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அதே சமயம் பாகிஸ்தானின் உலககோப்பை கனவும் கேள்விக்குறி ஆனது.