306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் நிக்கோலஸ் மற்றும் கப்தில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டி துவங்கிய முதல் ஓவரிலேயே நிக்கோலஸ் வோக்ஸ் வீசிய பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். கப்திலும் 8 ரன்களுக்கு ஆர்சர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். துவக்கமே மோசமான நிலையில் அமைந்தது நியூசிலாந்து அணிக்கு அதனால் அணியின் பொறுப்பு முழுவதும் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரின் மீது திணிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். கிட்டத்தட்ட இந்த ஜோடி இணைந்து பத்து ஓவர்களை விக்கெட் இழப்பின்றி கடத்தியது. ஆனால் இந்த இருவரும் துர்தஷ்டவசமாக அடுத்தடுத்து 27 மற்றும் 28 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகினர்.
இவர்களது விக்கெட்டினால் ஆட்டம் முழுவதும் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. இருந்தாலும் அடுத்து களமிறங்கிய லாதம் நிலைத்து ஆடி இங்கிலாந்து அணியை பதற வைத்தார். இவருக்கு துணையாக எந்த வீரரும் நிலையாக ஆடவில்லை. அனைவரும் சொற்ப ரன்களில் வேளியேறினர். இருந்தாலும் இவர் சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்தார். இறுதியில் 57 ரன்களில் இவரும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 45 ஓவர்களுக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி போட்டியை 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக வுட் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். சதம் விளாசி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. அதே சமயம் பாகிஸ்தானின் உலககோப்பை கனவும் கேள்விக்குறி ஆனது.