உலககோப்பை தொடரானது இங்கிலாந்து நாட்டில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவினைப் பொருத்தவரையில் நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியானது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியானது சௌதம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சினை தேர்வு செய்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் கடந்த போட்டியில் களமிறங்காத ரஸல் மற்றும் கேப்ரியல் இந்த போட்டியில் மீண்டும் அணியில் இடம் பிடித்தனர்.
மேற்கிந்திய தீவுகளின் சார்பாக கெயில் மற்றும் லீவிஸ் துவக்க வீரர்களாக களமிறங்கினர். போட்டித் துவங்கிய ஆரம்பத்திலேயே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்றாவது ஓவரிலேயே லீவிஸ் 2 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் மார்க் வுட் பந்தில் போல்ட் ஆனார். அதன் பின்னர் அந்த அணியின் நட்சத்திர வீரரான சாய் ஹோப் கிரிஸ் கெயில் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தது. ஒரு முனையில் ஹோப் நிதானமாக ஆட மறுமுனையில் கிரிஸ் கெயில் வழக்கம் போல தனது ரசிகர்களுக்கு வானவேடிக்கை காட்டத் துவங்கினார். சிறப்பாக ஆடி வந்த கெயில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ப்ளங்கட் வீசிய பந்தில் போர்ஸ்டோ-விடம் கேட்ச் ஆனார். அதன் அடுத்த ஓவரிலேயே ஹோப் வுட் வீசிய பந்தில் தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். இதனால் அந்த அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். சிறப்பாக ஆடிவந்த பூரான் அரைசதத்தை கடந்தார். ஹெட்மேயரும் மறுமுனையில் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி வந்தார். இவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்காக இங்கிலாந்து பல பந்து வீச்சாளர்களை உபயோகித்தது. இறுதியில் 89 ரன்கள் குவித்த இந்த ஜோடியை பிரித்தது ஜோ ரூட் தான். இவர் ஹெட்மேயரை 39 ரன்களில் இருந்தபோது அவரின் விக்கெட்டினை கைப்பற்றினார். அடுத்து வந்த கேப்டன் ஹோல்டரையும் அதே முறையில் பெவிலியனுக்கு ஆனுப்பினார் ரூட்.
மிகவும்.எதிர்பார்க்கப்பட்ட ரஸல் 2 சிக்ஸர்கள் விளாசிய வேகத்தில் 21 ரன்களில் வுட் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பூரான் நிலைத்து ஆடி வந்தார். இறுதியில் அவரும் 63 ரன்களில் இருந்த போது ஆர்ச்சரின் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்ட இறுதியில் அந்த அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் மற்றும் வுட் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணி புதிய சோதனையில் இறங்கியது. அந்த அணியின் துவக்க ஜோடியில் ஜேசன் ராய்யை களமிறக்காமல் அவருக்கு பதிலாக ஜோ ரூட்டை போர்ஸ்டோ உடன் துவக்க வீரர்களான களமிறக்கியது. இவர்களின் இந்த சோதனை அவர்களுக்கு நல்ல முடிவையே தந்தது. இந்த இருவரும் அதிரடியாக துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர். பேர்ஸ்டோ 46 ரன்களில் இருந்த போது காட்ரெல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வோக்ஸ் களமிறங்கி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தனர். ஆனால் இந்த சோதனையும் அவர்களுக்கு வெற்றியே பெற்றது.
இந்த ஜோடியும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. சிறப்பாக ஆடிய வோக்ஸ் பத்து ரன்களில் தனது அரைசதத்தை தவறவிட்டார். இவரது விக்கெட்டையும் காட்ரெல் வீழ்த்தினார். ரூட் அபாரமாக ஆடி இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தினை பதிவு செய்தார். இறுதியில் 33 ஓவர்களில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் காட்ரெல் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்திய ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.