உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இதுவரை ஒரு போடாடியில் கூட வெற்றி பெறாத ஆப்கானிஸ்தான் அணி இன்று தனது வெற்றிக் கணக்கை துவங்கும் நோக்கில் களமிறங்கியது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ராய் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்காததால் அவருக்கு பதிலாக வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.
அதன்படி பேர்ஸ்டோ மற்றும் வின்ஸ் இங்கிலாந்து அணி சார்பில் துவக்க வீரர்களான களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு நிதானமான துவக்கத்தை தந்தனர். வின்ஸ் 26 ரன்களில் இருந்த போது டவ்லட் ஜார்டன் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ரூட் போர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சீராக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இருவரும் தலா 90 மற்றும் 88 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த கேப்டன் இயான் மோர்கன் ருத்ரதாண்டவம் ஆடினார். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களை கதிகலங்க வைத்த இவர் 57 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சதமடித்த பின்னரும் இவர் ஓயவில்லை. பவுண்டரிகளைக் காட்டிலும் சிக்ஸர்களே விளாசித் தள்ளினார் இவர். இறுதியில் 71 பந்துகளில் 148 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் மோர்கன். இதில் 17 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். அதன் பின்னர் மொயின் அலியின் அதிரடியில் இங்கிலாந்து அணி 397 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி:

2019 உலககோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே. ஒட்டுமொத்த உலககோப்பை வரலாற்றிலேயே இது ஆறாவது அதிகபட்ச ஸ்கோராக இடம் பிடித்துள்ளது. இந்த வரிசையில் முதலிடத்தில் கடந்த உலககோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி குவித்த 417 ரன்கள் உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே ஒரு இன்னிங்ஸ்ல் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற சாதனையையும் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இன்றைய போட்டியில் மோர்கன் அடித்த 17 சிக்ஸர் மற்றும் இதர வீரர்களின் 8 சிக்ஸருமாக மொத்தம் 25 சிக்ஸர்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு முன்பாக இங்கிலாந்து அணி இதே ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 24 சிக்ஸர்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.
இயான் மோர்கன் :

இன்றைய போட்டியில் இயான் மோர்கன் குவித்த 148 ரன்களின் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆதியுள்ளார் இவர்.
ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸ்ல் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற புதிய சாதனையை 17 சிக்ஸர்கள் குவித்ததன் மூலம் படைத்துள்ளார். இதன் மூலம் இதற்க்கு முன்னர் கிரிஸ் கெயில், ரோகித் ஷர்மா மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் அடித்திருந்த 16 சிக்ஸர்கள் என்ற சாதனையை முறியடித்தார்.
இந்தாண்டு உலககோப்பை தொடரில் 57 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஒட்டுமொத்த உலககோப்பை தொடர்களை பொருத்தவரையில் இவர் நான்காம் இடத்தினையும் பிடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்:

ஆப்கானிஸ்தான் அணியினைப் பொருத்தவரையில் சுழல்பந்து வீச்சு தான் அந்த அணியின் பலமாக கருதப்படும். ரஷீத் கான், முஜீப் ரகுமான் மற்றும் முகமது நபி என உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது அந்த அணி. அதுமட்டுமின்றி ரஷீத் கான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் இன்றைய போட்டியை பொருத்தவரையில் இவர்கள் மூவரும் இணைந்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.
ரஷீத் கான்:

ரஷீத் கான் தற்போது நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட சிறப்பாக பந்துவீசினாலும் இன்று இவரின் பந்து வீச்சு இங்கிலாந்து அணியிடம் எடுபடவில்லை. இன்று 9 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய இவர் 110 ரன்களை வாரி வழங்கிவிட்டார்.
இந்த போட்டியில் இவரது பந்து வீச்சில் மட்டும் 11 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்தார் இவர்.
அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சாளர் 100-க்கும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுப்பது ஒருநாள் போட்டிகள் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை.
110 ரன்கள் இன்றைய போட்டியில் வழங்கியதன் மூலம் அதிக ரன்கள் வழங்கிய வீரரர் என்ற பட்டியலில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இடத்தையும், உலககோப்பை வரலாற்றில் முதலிடத்தையும் பிடித்தார் இவர்.
இன்று இவரின் பந்து வீச்சை மட்டும் குறிப்பிட்டு விளாசினார் மோர்கன். அதாவது இவரின் பந்தில் மட்டும் 7 சிக்ஸர்கள் விளாசினார் அவர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேன் பந்து வீச்சாளரின் பந்தில் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவே.