உலககோப்பை தொடரானது மிகபிரமாண்டமாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று வார போட்டிகள் நிறைவடைந்ததையொட்டி ஆஸ்திரேலிய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆப்கானிஸ்தான் ஒரு புள்ளி கூட எடுக்காமல் கடைசி இடத்திலும் இருந்தன. அதுமட்டுமின்றி இதுவரை நான்கு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. ஆப்கானிஸ்தான் அணி தான் மோதிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்ததால் இந்த போட்டியில் அந்த அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது. மான்செஸ்டர் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
கடந்த போட்டியில் காயமான இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜோசன் ராய்க்கு பதிலாக இம்முறை ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். அதன்படி வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமான துவக்கத்தை அணிக்கு தந்தனர். இதில் வின்ஸ் 26 ரன்களில் இருந்தபோது டவ்லட் ஜார்டன் வீசிய பந்தில் முஜீப் ரகுமானிடம் கேட்ச் ஆனார். அதன் பின்னர் உலககோப்பை தொடரில் அசத்தி வரும் ஜோ ரூட் களமிறங்கினர். அவர் பேர்ஸ்டோ உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பேர்ஸ்டோ அரைசதத்தை கடந்தார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பேர்ஸ்டோ 90 ரன்களில் இருந்தபோது நெய்ப் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார்.
அடுத்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் களமிறங்கினார். இவர் ஜோ ரூட் உடன் ஜோடி சேர்ந்து ஆடத் துவங்கினார். ரூட் ஒரு முனையில் நிதானமாக ஆட மறுமுனையில் மோர்கன் வழக்கத்தைக் காட்டிலும் அதிரடியாக ஆடி வந்தார். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துகளையும் மைதானத்தை விட்டு பறக்கவிட்டார் இவர். ரூட் தனது அரைசதத்தை நிறைவு செய்து சிறப்பாக ஆடி வர மோர்கன் ருத்ரதாண்டவம் ஆடி 57 பந்துகளில் தனது சதத்தினை பதிவு செய்தார். அதன் பின்னரும் தனது அதிரடியைத் தொடர்ந்தார் மோர்கன். இந்நிலையில் ரூட் 88 ரன்களில் இருந்தபோது நெய்ப் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதே ஓவரில் மோர்கனும் 148 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த அதிரடி ஆட்க்காரரான பட்லர் 2 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 2 ரன்னிலும் அடுத்தடுத்து டவ்லட் ஜார்டன் பந்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் மொயின் அலியின் அதிரடியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. இந்த உலககோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவே. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் டவ்லட் ஜார்டன் மற்றும் நெய்ப் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணி சார்பில் நூர் அலி மற்றும் நெய்ப் துவக்க வீரர்களான களமிறங்கினர். ஆட்டம் துவங்கிய இரண்டாவது ஓவரிலேயே நூர் அலி ஆர்ச்சர் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் ரஹ்மத் ஷா களமிறங்கினார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்தனர். அதிரடியாக ஆடிவந்த நெய்ப் 37 ரன்களில் இருந்த போது மார்க் வுட் பந்தில் பட்லரிடம் கேட்ச் ஆனார். அதன் பின் ஷாகிடி ரஹ்மத் ஷா உடன் இணைந்து நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடி வந்த ரஹ்மத் ஷா 4 ரன்னில் தனது அரைசதத்தை தவறவிட்டு ரஷீது பந்தில் ஆட்டமிழந்தார்.
ஷாகிடி தொடர்ந்து நிதானமாக ஆடி வர மறுமுனையில் அஃகன் சற்று அதிரடியாக ஆடினார். ஷாகிடி தனது அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் அஃகன் சிறப்பாக ஆடி ரன்களை குவித்த வன்னம் இருந்தார். இந்த ஜோடி இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்தது. பின் அஃகன் 44 ரன்னிலும், ஷாகிடி 76 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 247 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியை 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் மற்றும் அடில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளும், வுட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதிரடியாக ஆடி 148 ரன்கள் குவித்த இயான் மோர்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.