இந்தாண்டு உலககோப்பை தொடரானது இங்கிலாந்து நாட்டில் மிக பிரமாண்டமாக துவங்கி நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் சில போட்டிகளில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை பாதித்தாலும் இறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதில் முதல் அரையிறுதியில் நியுசிலாந்தும், இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதுவரை இந்த இரண்டு அணிகளும் உலககோப்பையை வெல்லாததால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த போட்டியானது இன்று இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வழக்கம் போல நியூசிலாந்து அணி தடுமாற்றத்துடனே ஆட்டத்தை துவங்கியது. எல்லா போட்டிகளிலும் சொதப்பிய கப்தில் இந்த போட்டியிலும் 19 ரன்கள் மட்டுமே ஏடுத்த நிலையில் வோக்ஸ் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் அந்த அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் களமிறங்கினார். அவர் நிக்கோலஸ் உடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்தார். இருவரும் அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தி வந்தனர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிவந்த வில்லியம்சன் 30 ரன்களில் இருந்தபோது அதிர்ச்சி அளிக்கும் விதமாக ப்ளங்கட் பந்தில் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். அதன்பின் அந்த அணியின் நட்சத்திர வீரரான ராஸ் டெய்லர் களமிறங்கினார்.

சிறப்பாக ஆடிய நிக்கோலஸ் அரைசதத்தை கடந்தார். பின் சில நிமிடங்களிலேயை ப்ளங்கட் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் அந்த அணிக்கு எந்த வீரரும் நிலைத்து ஆடவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் வெறும்15 ரன்கள் மட்டுமே எடுத்து வுட் பந்திற்கு இறையானார். மறுமுனையில் களமிறங்கிய அந்த அணியின் விக்கெட் கீப்பர் லாதம் நியூசிலாந்துக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடினார். அவருடன் இணைந்த அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான நேஷம் நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் லாதம் ரன்களை குவித்த வண்ணம் இருந்தார்.

நேஷம் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற மற்றொரு ஆல்ரவுண்டரான கிராண்ட் ஹோம் லாதம் உடன் இணைந்தார். கிராண்ட்ஹோம் நிதானமாகவே ரன்களை குவித்து வந்தார். மறுமுனையில் லாதம் நிலைத்து ஆடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்த ஜோடி விக்கெட் இழப்பை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தி ரன்களை குவித்தனர். அப்போது கிராண்ட்ஹோம் 19 ரன்களில் வேளியேற சிறப்பாக ஆடிவந்த லாதமும் 47 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை வோக்ஸ் பந்தில் பறிகொடுத்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இங்கிலாந்து அணி சார்பில் வோக்ஸ், ப்ளங்கட் தலா மூன்று விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. வழக்கம் போல ராய் மற்றும் போர்ஸ்டோ துவக்க வீரர்களாக களமிறங்கினர். நியூசிலாந்தை போலவே இங்கிலாந்தும் ஆரம்பம் முதலே சரிவை சந்தித்தது. ராய் 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஹேன்றி பந்தில் லாதம்-யிடம் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய ரூட் பேர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 10 ஓவர்களை வரை நிலைத்து நின்றாலும் ரன்களை குவிக்க தடுமாறியது. இதன் முடிவில் ரூட் 7 ரன்களிலும், பேர்ஸ்டோ 36 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மோர்கனும் 9 ரன்னில் வெளியேற இங்கிலாந்து அணி 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் அணியின் நிலை உணர்ந்து சிறப்பாக ஆடினர். ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடிய இருவரும் ஒரு கட்டத்தில் அதிரடியாக ஆடத்துவங்கினர். சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடந்தனர். ஆனால் துர்தஷ்டவசமாக பட்லர் 59 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குயுசன் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்து வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இருந்தாலும் மறுமுனையில் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி அந்த அணிக்கு நம்பிக்கை சேர்த்தார். இறுதியில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆடிய ஸ்டோக்ஸ் தனது அதிரடியால் 14 ரன்கள் குவித்து போட்டியை டிரா ஆக்கினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்திருந்தார். எனவே போட்டியின் முடிவினை காண சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது.

இதில் முதலில் களமிறங்கிய பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து அந்த ஓவரில் 15 ரன்கள் குவித்தனர். பின்னர் 16 ரன்கள் எடுத்தால் உலககோப்பையை கைப்பற்றலாம் என்ற நோக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி சார்பில் நேஷம் மற்றும் கப்தில் களமிறக்கப்பட்டனர். அதிரடியாக ஆடிய நேஷம் 5 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் களத்திலிருந்த கப்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க போட்டி மீண்டும் சமனில் முடிந்தது. இருந்தாலும் பவுண்டரிகள் நியூசிலாந்தை காட்டிலும் இங்கிலாந்து அதிகமாக அடித்ததன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக இங்கிலாந்து அணி முதல் முறையாக உலககோப்பையை கைப்பற்றியது. சிறப்பாக ஆடி கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வாங்கித் தந்த ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்ந தெடர் முழுவதும் நியூசிலாந்து அணிக்காக சிறப்பாக ஆடி 578 ரன்கள் குவித்த கேன் வில்லியம்சன் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.