இங்கிலாந்து அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த சாதனை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். அதிரடியாய் 6 சிக்சர்களை விளாசிய மோர்கன் 88 பந்துகளில் 103 ரன்களையும், 12 சிக்சர்களை விளாசிய ஜாஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களையும், விளாசினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்கள் குவித்தது.
419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி. தொடக்கத்திலிருந்தே கிறிஸ் கெயில் மட்டும் அதிரடியாக விளையாடினார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அதிரடியாக 11 பவுண்டரிகளையும், 14 சிக்சர்களையும் விளாசிய கிறிஸ் கெயில், 97 பந்துகளில் 162 ரன்களை விளாசினார். சார்லஸ் பிராத்வேட் மற்றும் டேரன் பிராவோ ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இறுதியில் 48 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 389 ரன்களை அடித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. எனவே இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய அடில் ரஷித் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிக சிறப்பாக விளையாடிய பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இங்கிலாந்து அணி படைத்த உலக சாதனை பற்றிய விவரம்:
இந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தம் 24 சிக்சர்களை விளாசியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசி ஒரே அணி, என்ற உலக சாதனையை தற்போது இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இதற்கு முன்பாக இந்த உலக சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணி படைத்திருந்தது. இந்த ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 சிக்சர்கள் விளாசி, இந்த உலக சாதனையை தன்வசம் வைத்திருந்தது.
இந்த போட்டியில் படைக்கப்பட்ட மற்ற சாதனைகள்:
இந்த போட்டியில் மோர்கன் சதம் விளாசியதன் மூலம் 6000 ரன்களை கடந்தார். இதன் மூலம் 6000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் மோர்கன். அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் 10000 ரன்களை கடந்தார். இதன் மூலம் 10000 ரன்களை கடந்த 2வது மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரைன் லாரா இந்த சாதனையை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி விரைவாக 10000 ரன்களை கடந்த 14வது வீரர் என்ற சாதனையையும் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த இரண்டு அணிகளும் அடித்த ரன்கள் 807 ஆகும். இது ஒரு நாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பாக 2009 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 825 ரன்கள் அடிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையேயான 5 ஆவது ஒரு நாள் போட்டி வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.