இன்று கார்டிப் மைதானத்தில் நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்க உள்ளது, இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. தங்களது முதலாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை துவம்சம் செய்து சிறப்பாக தொடரை தொடங்கிய போதிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலேயே 14 ரன்களை வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது, இங்கிலாந்து அணி. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேப்டன் இயான் மோர்கன், தோழ்வியிலிருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப உள்ளதாக கூறியுள்ளார்.
ஆடும் லெவனில் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீத் கழற்றிவிடப்பட்டு வேகப்பந்து வீச்சாளரான லியாம் பிளங்கெட் இணைக்கப்படலாம் என்பதற்கான வாய்ப்பும் இங்கிலாந்து அணிக்கு உள்ளது. இம்மைதானத்தில் தொடர்ந்து வீசும் காற்று மற்றும் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் என மாறுபட்ட வானிலை நிலவரம் நிலவி வருகிறது. ஆட்டத்தினை முழுமையாக தங்களுக்கு சாதகமாக முடிக்க இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடுமையான போராட்டத்தை அளிக்க இருக்கின்றது. எதிரணியான வங்கதேசம் தங்களது முதலாவது ஆட்டத்தில் பலமிகுந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களம் காண இருக்கின்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்திலும் கூட நூலிலையில் தமது வெற்றி வாய்ப்பினை பறிகொடுத்து இருக்கின்றது, வங்கதேசம். கடந்த இரு உலக கோப்பை தொடர்களான முறையே 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணியை சந்தித்த இரு போட்டிகளிலும் வாகை சூடியுள்ளது, வங்கதேச அணி. எனவே, இன்றைய போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய உள்ளது.
இதுவரை 2019 உலகக்கோப்பை தொடரை இவ்விரு அணிகளும் கையாண்ட விதம்:
உலகக் கோப்பை தொடரை நடத்திடும் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்க அணியை புரட்டிப்போட்டும் பென் ஸ்டோக்ஸின் அபாரமான கேட்ச் ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர், பாகிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி அளித்தும் உள்ளது. இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி அபாரமாக வெற்றி பெற்று, இரண்டாவது ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பு வரை தங்களது போராட்டத்தினை அளித்துள்ளது.
இரு அணி கேப்டன்களின் நிலைப்பாடு:
இங்கிலாந்து கேப்டன் மோர்கன், "இப்போட்டி சற்று மாறுபட்டதாகும். மக்கள் குறைத்து மதிப்பிட்டதைப்போல நாங்கள் அவ்வளவு எளிதாக எதையும் எடுத்துக்கொள்ள மாட்டோம்".
வங்கதேச கேப்டன் மோர்தசா, "தொடரில் விளையாடும் சிறந்த அணிகளில் ஒன்று இங்கிலாந்து. அவர்கள் இன்னும் சரியான பாதையில் தான் சென்று கொண்டு வெற்றிகளை குவித்து வருகிறார்கள்".
சாதனை துளிகள்:
2015 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் சேசிங் செய்யும் போது எந்தவொரு போட்டியிலும் தோற்றதில்லை என்ற சாதனை பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது.
ஆசிய அணிக்கு எதிரான கடந்த 10 உலக கோப்பை போட்டிகளில் வெறும் இரண்டில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜோஸ் பட்லர் சதம் அடித்ததன் மூலம் கடந்த 7 போட்டிகளில் 3 சதங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற கடந்த ஏழு ஒருநாள் போட்டிகளில் ஐந்து அரை சதங்கள் உட்பட 408 ரன்களை குவித்துள்ளார்.