வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி ‘செயின்ட் கிட்ஸ்’ மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தொடங்கியது. தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்தில் இங்கிலாந்து அணி களம் கண்டது. அதே நேரத்தில் ஆறுதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் இறங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் முக்கிய மாற்றமாக அதிரடி மன்னன் கிறிஸ் கெயிலுக்கு பதிலாக ‘ஜான் கேம்பெல்’ களமிறங்கினார். கடந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஆட்டத்தின் முதல் பந்திலேயே முன்னணி பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் ‘டேவிட் வில்லி’ பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல கடந்த ஆட்டத்தை போலவே இந்த முறையும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மென்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.
‘டேவிட் வில்லி’ மற்றும் ‘மார்க் வுட்’டின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் முழுமையாக சிதறிப் போயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.
முடிவில் வெறும் 13 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 71 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேம்பெல், ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரான் தலா 11 ரன்களை சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை கலங்கடித்த ‘டேவிட் வில்லி’ 3 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவருக்கு பக்கபலமாக வீசிய ‘மார்க் வுட்’ 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பார்ஸ்டோ மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இலக்கு எளிது என்பதால் இருவரும் அதிரடி ஆட்டத்தை அளித்தனர். 13 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த அலெக்ஸ் ஹேல்ஸ், ‘ஜேசன் ஹோல்டர்’ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இலக்கை நெருங்கும் நேரத்தில் சிறப்பாக ஆடி வந்த ஜானி பேரிஸ்டோ 37 ரன்களில் ‘பிஷு’ பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். பின்னர் களம் கண்ட ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயன் மோர்கன் எளிதான இந்த இலக்கை எட்டி இங்கிலாந்தை வெற்றி பெற வைத்தனர்.
இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்-வாஷ் ஆக்கியது.
இந்த தொடரில் பந்துவீச்சில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டேவிட் வில்லி ஆட்டநாயகன் விருதையும், கிறிஸ் ஜோர்டான் தொடர்நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.
டி-20 போட்டிகளில் அபாயகரமான அணியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த தோல்வி மோசமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதே நேரம் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி அதிரடி வீரர்கள் இல்லாமலேயே இங்கிலாந்து அணி இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.