இலங்கை, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும், பென் போக்ஸ் 36 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
முன்னதாக பென் ஸ்டோக்ஸ் 22 மற்றும் 32 ரன்களில் கேட்ச் ஆன போது, இரண்டு முறையும் பவுலிங் செய்த சன்டகன் நோ–பாலாக வீசியது தெரியவந்ததால் எரிச்சலுக்குள்ளான இலங்கை பொறுப்பு கேப்டன் சுரங்கா லக்மல் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை மைதானத்தில் வீசி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
பின்னர் 327 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.மீண்டும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இலங்கை. சண்டகன் 7 ரன்னில், ஜாக் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்பு, குஷால் மெண்டிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரோஷன் சில்வா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மென்டிஸ் சிறப்பாக ஆடி இன்னிங்சை கட்டமைத்தார், ரோஷன் சில்வா வைடு ஆப் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிவைத்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 184 ஆக இருக்கும் போது குஷால் மெண்டிஸ் 86 ரன்களுடன் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.பின் வந்த டிக்வெல்லா 19 ரன்களுடனும் தில்ருவான் பெரேரா 5 ரன்களுடனும் வெளியேறினர். பின் அரைசதம் கடந்த ரோஷன் சில்வாவும் 65 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் வெளியேறினார்.அத்துடன் இலங்கையின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு புஷ்பகுமாரா உடன் இணைந்த லக்மல் கடைசி விக்கெட்டுக்காக இருவரும் 58 ரன்கள் ரன்கள் சேர்த்தனர்.கடைசி விக்கெட் என்பதால் தேநீர் இடைவேளை தவிர்த்து போட்டி நீட்டிக்கப்பட்டது.ஆனால் இங்கிலாந்து அணியால் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பின் தேநீர் இடைவேளைக்கு பின் களமிறங்கிய இங்கிலாந்து லக்மல் 11 ரன்களுடன் ஜாக் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. ஆனார். இறுதியில் புஷ்பகுமாரா 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி மற்றும் ஜாக் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனால் இலங்கை 42 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்து 3-0 என இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை மண்ணில் இங்கிலாந்து ஒருநாள்,டி20,டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடரை கைப்பற்றியது இதுவே முதல்முறை.
இதற்க்குமுன், பாகிஸ்தான் 2015லும் , இந்தியா 2017லும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது.