உலகின் ‘நம்பர் 1’ அணியாக திகழும் ‘இங்கிலாந்து’ மற்றும் இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு சில அதிர்ச்சிகளை கொடுத்துள்ள ‘அயர்லாந்து’ அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட தொடர் அயர்லாந்தின் ‘டப்ளின்’ நகரில் நடைபெற்றது.
விரைவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக அதிக வாய்ப்புள்ள ஒரு அணியாக கருதப்படும் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. மழை காரணமாக இந்த போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ‘இயான் மோர்கன்’ முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி பேட்டிங்கை ஆரம்பித்த அயர்லாந்து அணிக்கு அனுபவம் வாய்ந்த ‘வில்லியம் போட்டர்ஃபீல்டு’ & ‘ஸ்டிர்லிங்’ ஜோடி ஓரளவு நல்ல துவக்கத்தை அளித்தனர். போட்டர்ஃபீல்டு 17 ரன்களிலும், ஸ்டிர்லிங் 33 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய ‘பால்பிரைன்’ 29 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இதன் பின்னர் வந்த வீரர்கள் விரைவாக நடையை கட்ட அயர்லாந்து அணி தடுமாறியது. இருப்பினும் பின்வரிசையில் களம் கண்ட டாக்ரெல் 24 ரன்களும், மார்க் அடைர் 32 ரன்களும் சேர்க்க அயர்லாந்து அணி 43.1 ஓவர்களில் 198 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் ‘பிளங்கெட்’ 4 விக்கெட்டுகளையும், ‘டாம் கரன்’ 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுக வீரர் ‘ஜோஃப்ரா ஆர்ச்சர்’ 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ‘ஜேம்ஸ் வின்ஸ்’ 18 ரன்களிலும், ‘டேவிட் மலான்’ 24 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ஆனால் இதன் பிறகே இங்கிலாந்துக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
கேப்டன் மோர்கன் ரன் கணக்கைத் தொடங்காமலே ‘டக்’ அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு அனுபவ வீரரான ‘ஜோ ரூட்’ 7 ரன்களிலும், ‘ஜோ டென்லி’ 8 ரன்களிலும் நடையை கட்ட இங்கிலாந்து அணி 66 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த அறிமுக வீரர் ‘பென் ஃபோக்ஸ்’ சக வீரர் ‘டேவிட் வில்லி’ உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். அணியின் ஸ்கோர் 101 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. 20 ரன்களை எடுத்த நிலையில் டேவிட் வில்லி ஆட்டமிழந்தார்.
6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அயர்லாந்து அணி வீரர்கள் உற்சாகமானார்கள். ஆனால் அடுத்து களமிறங்கிய ‘டாம் கரன்’ இந்த உற்சாகத்துக்கு முடிவு கட்டினார். அயர்லாந்து பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட இவர் துரிதமாக ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ‘பென் ஃபோக்ஸ்’ தனது அறிமுக ஆட்டத்திலேயே அரைசதத்தை கடந்தார்.
இந்த ஜோடி ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் முழுமையாகத் திரும்பியது. இறுதியாக ‘ஜோஷ்வா லிட்டில்’ பந்துவீச்சில் பவுண்டரி அடித்து டாம் கரன் வெற்றிகரமாக ஆட்டத்தை முடித்து வைத்தார். இங்கிலாந்து அணி 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபோக்ஸ் 61 ரன்களுடனும், டாம் கரன் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மிரட்டலாக பந்துவீசிய ‘ஜோஷ்வா லிட்டில்’ 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அடுத்ததாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியுடன் T-20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதுகிறது. முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரே T-20 போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘கார்டிஃப்’ நகரில் நடைபெற உள்ளது.