டெஸ்ட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு மாற்றாக, 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் டெஸ்ட் போட்டி 'இங்கிலாந்து' மற்றும் 'அயர்லாந்து' அணிகளுக்கு இடையே புகழ்பெற்ற இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் 'டிம் முர்டாக்'-இன் அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் வேகமாக ஆட்டமிழந்து வெளியேறினர். முடிவில் இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
அயர்லாந்து அணியின் 'டிம் முர்டாக்' 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் இங்கிலாந்து அணி உள்ளூரில் மிகக்குறைந்த ஓவர்களில் (23.4) சுருண்ட இன்னிங்ஸ் இதுவாகும்.
இதன்பிறகு களம் கண்ட அயர்லாந்து அணி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சு திறம்பட சமாளித்து விளையாடி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று சாதித்தது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய அளவிலான முன்னிலையை அயர்லாந்து அணியால் பெற இயலவில்லை. முடிவில் அதே முதல் நாளிலேயே அயர்லாந்து அணி 207 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.
முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 122 ரன்கள் முன்னிலை பெற்றது. அயர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக 'பால்பிரைன்' 55 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டூவர்ட் பிராட், ஓலி ஸ்டோன், சாம் கரன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி நெருக்கடிக்கு மத்தியில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முந்தைய நாள் முடிவில் விக்கெட் தடுப்பாளராக (நைட் வாட்ச்மேன்) களமிறக்கப்பட்ட பந்துவீச்சாளர் 'ஜேக் லீச்' அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்து இவருக்கு, தனது அறிமுக டெஸ்டில் விளையாடும் 'ஜேசன் ராய்' நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் 171-1 என இங்கிலாந்து நல்ல நிலைமையில் இருந்து விதத்தை பார்க்கும் பொழுது வலுவான முன்னிலை நோக்கி நீங்கள் இருந்து செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லீச் 92 ரன்களிலும், ராய் 72 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன.
இறுதி கட்டத்தில் 'சாம் கரன்' அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னிலை 150 ரன்களை கடந்தது. 3-வது நாளின் முதல் பந்திலேயே இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 303 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆகி 181 ரன்கள் முன்னிலை பெற்றது. அயர்லாந்து அணி தரப்பில் அடைர் மற்றும் தாம்சன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 3-வது நாளான இன்று 182 ரன்கள் சேர்த்தால் சரித்திர வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து. ஆனால் அதற்கு துளியும் வாய்ப்பில்லாமல் செய்தனர் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்.
மேகமூட்டமான சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டவர்கள் அந்த அற்புதமாக 'ஸ்விங்' செய்து அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்களை முற்றிலுமாக தடுமாற செய்தனர். இவர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சில் அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையை கட்டினார்.
முடிவில் வெறும் 15.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்த அயர்லாந்து அணி 138 ரன்களுக்கு சுருண்டு 143 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய 'கிறிஸ் வோக்ஸ்' 6 விக்கெட்டுகளையும், 'ஸ்டூவர்ட் பிராட்' 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
முதல் இன்னிங்சில் தங்களை 85 ரன்களுக்கு சுருட்டிய அயர்லாந்தை, இங்கிலாந்து அணி கடைசி இன்னிங்சில் வெறும் 38 ரன்களுக்கு சுருட்டி வீசி பழிதீர்த்துக் கொண்டது. மேலும் கடந்த 112 வருடங்களில் முதல் இன்னிங்சில் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அந்த போட்டியை வென்ற அணி என்ற சாதனையைப் படைத்தது இங்கிலாந்து.
சிறப்பான பேட்டிங் ஆல் இங்கிலாந்து அணியை மீட்டெடுத்த 'ஜேக் லீச்' ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 'ஆஷஸ்' கோப்பை வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.