பாக்ஸிங் டே (Boxing Day) டெஸ்ட் போட்டி என்றால் என்ன?

பாக்ஸிங் டே கிரிக்கெட் மைதானம்
பாக்ஸிங் டே கிரிக்கெட் மைதானம்

பாக்ஸிங் டே (Boxing Day) எனப்படுவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அடுத்த நாள். ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 26ஆம் நாள் கொண்டாடப்படும் பாக்ஸிங் டே அன்று டெஸ்ட் போட்டி தொடங்கப்பட்டால் அந்த டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படும். பொதுவாக பாக்ஸிங் டே என்றால், கிறிஸ்துமஸ் கொண்டதாட்டத்தின் அடுத்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கம் வீட்டினர் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பரிமாறிக்கொண்டு தங்கள் அன்பினை வெளிப்படுத்துவர். Box (பரிசு பொருட்கள் நிறைந்த பெட்டி) இதை தான் பாக்ஸிங் டே அன்று அனைவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

நாளடைவில் பாக்ஸிங் டே அன்று கால்பந்து மற்றும் கிரிக்கெட் என விளையாட்டு போட்டிகளையும் தொடங்கினர். கிரிக்கெட் போட்டி என்று வரும் பொழுது ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மிக கோலாகலமாக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடத்தப்படும். இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தனது நாட்டுக்கு வருகை தந்துள்ள அணியிடம் விளையாடும்.

2018 பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 1950 முதல் 2017 வரை நாற்பதுக்கும் மேற்பட்ட பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.

முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி 1950ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த பாக்ஸிங் டே போட்டி 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டி டராவில் முடிந்தது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாக்ஸிங் டே அன்று கடைசியாக வெற்றி பெற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிடம். இந்த போட்டி 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2013ஆம் நடந்த பாக்ஸிங் டே போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. இந்த போட்டியை காண அன்றைய தினம் 91, 112 ரசிகர்கள் வருகை தந்தனர். இது வரை நடந்த போட்டியில் அதிக ரசிகர்கள் கூடிய போட்டி இது தான்.

1989ஆம் ஆண்டு பாக்ஸிங் டே அன்று டெஸ்ட் போட்டிக்கு பதிலாக ஒரு நாள் போட்டி நடந்தது. இந்த பாக்ஸிங் டே ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை பாக்ஸிங் டே ஒரு நாள் போட்டி ஒன்று மட்டுமே நடந்துள்ளது.

இதுவரை நடந்த பாக்ஸிங் டே போட்டிகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இருபதுக்கும் மேற்பட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதில் பத்து போட்டிகள் டராவில் முடிந்துள்ளது. 1999 முதல் 2007 வரை நடந்த ஒன்பது பாக்ஸிங் டே போட்டிகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.